சுடச்சுட

    

    நீதிமன்றம் அளித்த கெடுவுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்: வாசன்

    By DIN  |   Published on : 18th May 2017 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீதிமன்றம் அளித்த கெடுவுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்.
    திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த அவர் அளித்த பேட்டி: தமிழக அரசு கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தமிழக அரசின் கடன் நெருக்கடிதான் காரணம்.
    தமிழக அரசின் தொழில்துறை வளர்ச்சிப் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு வர வேண்டிய தொழிற்சாலைகள் குஜராத், ஆந்திரம் போன்ற மாநிலங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழகத்தின் வளர்ச்சியில் அரசின் அக்கறையின்மையைக் காட்டுகிறது. தொழில்துறையில் வளர்ச்சி குறைந்துள்ளது. கடனை சரிசெய்ய அரசு என்ன செய்யப் போகிறது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழக அரசு மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் கூட்டத் தொடரை முடித்து வைக்கப்பட்டிருப்பது துரதிஷ்டவசமானது.  நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்க அளிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்த ஒற்றுமை நீட் விவகாரத்தில் இல்லை.
    போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்னையில்  சரியான அணுகுமுறை இல்லாததாலும் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். எஸ்மா சட்டத்தைப் பயன்படுத்தி தொழிலாளர்களை ஒடுக்க நினைக்கக் கூடாது. தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்களை பழிவாங்க அரசு நினைக்கக்கூடாது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனையில் சட்டம் தனது கடமையைச் செய்திருக்கிறது. இருந்தாலும் உண்மை நிலையை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சியாளர்களை மக்கள் நம்புவார்கள். நடிகர் ரஜினிகாந்த் மனதில் தோன்றும் தனது கருத்தை தெளிவாகச் சொல்லிவிடுவார். அவர் தற்போது சொன்ன கருத்துக்கு நான் அரசியல் கற்பிக்க விரும்பவில்லை. அரசியலுக்கு வர வேண்டுமா, வர வேண்டாமா என்பது ரஜினியின் தனிப்பட்ட விருப்பம். நீதிமன்றம் அளித்த கெடுவுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றார் வாசன்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai