சுடச்சுட

    

    அரியமங்கலம் உரக்கிடங்கில் தீ விபத்து: 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்

    By DIN  |   Published on : 21st May 2017 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி அரியமங்கலத்தில் உள்ள தனியார் உரக்கிடங்கில் சனிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் ஏராளமான உரமூட்டைகள், பூச்சிமருந்துகள் தீயில் எரிந்து சேதமாயின.
    திருச்சி அரியமங்கலம் விவிஎல்பி மில் தெருவில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (48) என்பவரது உரக்கிடங்கு உள்ளது. இவர் பிரபல நிறுவனத்தின் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், குருணை மருந்துகளை மொத்தமாக விற்பனை செய்து வருகிறார். இதற்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள உரமூட்டைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், குருணை மருந்துகள் அடங்கிய பைகள், பெட்டிகளை கிடங்கில் இருப்பு வைத்திருந்தாராம்.
    சனிக்கிழமை அதிகாலை உரக்கிடங்கின் ஒரு பகுதியிலிருந்து புகை வந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தீப்பிடித்து கிடங்கு முழுவதும் பரவியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
    தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ கிடங்கு முழுவதும் பரவியது.திருச்சி, ஸ்ரீரங்கம், நவல்பட்டு, திருவெறும்பூர், பெல் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.உரக்கிடங்கில் பூச்சிக்கொல்லி மருந்து, குருணை மருந்துகள் எரிந்ததால் ஏற்பட்ட கரும்புகையால் அப்பகுதி மக்களுக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தீயணைப்புப் பணியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, மாநகராட்சி தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு, சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இந்த விபத்தில் ஏராளமான உரமூட்டைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தீயில் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அரியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், தீ விபத்துக்கு மின்கசிவே காரணம் எனத் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai