சுடச்சுட

  

  திருச்சியில் விமானப் படைக்கு ஆள் சேர்ப்பு முகாம்: முதல் நாளில் 3,500 இளைஞர்கள் பங்கேற்பு

  By DIN  |   Published on : 21st May 2017 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விமானப் படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் சனிக்கிழமை (மே 20) தொடங்கியது. முதல் நாளில் 3,500 இளைஞர்கள் பங்கேற்றனர்.
  இந்த முகாமில் முதல் நாளான சனிக்கிழமை திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, மதுரை, விழுப்புரம், திருநெல்வேலி, சேலம், நாகை, புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், கரூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 17 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான தேர்வு நடைபெற்றது.
  இத்தேர்வில் பங்கேற்க இந்த மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெள்ளிக்கிழமை இரவு முதலே திருச்சியில் குவியத் தொடங்கினர். முதல் நாள் தேர்வில் மட்டும் 3,500 இளைஞர்கள் பங்கேற்றனர்.
  கையில் முத்திரை...: வந்திருந்த இளைஞர்கள், திருச்சி அண்ணா விளையாட்டரங்கின் வாயிலில் போலீஸாரால் அமைக்கப்பட்டிருந்த 6 பெட்டிகள் போன்று வடிவமைக்கப்பட்டிருந்த தடுப்புகளுக்குள் உட்காரவைக்கப்பட்டனர். தொடர்ந்து, தலா 20 நபர்களாக அழைத்து உயரத்தை அளந்து, தேர்வானவர்களை தனி வரிசையில் அமர்த்தினர். அதன்பிறகு, அவர்களது சான்றிதழ்கள் விமானப் படை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டன. பிறகு, அவர்களது கையில் முத்திரையிடப்பட்டது.
  எழுத்துத் தேர்வு...: இதையடுத்து தேர்வர்களுக்கு, 50 மதிப்பெண்கள் கொண்ட ஆங்கிலம், கணிதத் திறனறிதல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உளவியல் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 21) உடல்தகுதி தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் விமானப் படைக்கு தேர்வு செய்யப்படுவர்.
  தொடர்ந்து 22, 23 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், திண்டுக்கல், பெரம்பலூர், தருமபுரி, கோவை, காஞ்சிபுரம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, வேலூர், கன்னியாகுமரி, தேனி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, அரியலூர், நீலகிரி ஆகிய 17 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் முகாமில் பங்கேற்கலாம்.
  மேலும், 20 ஆம் தேதி பல்வேறு காரணங்களால் பங்கேற்க முடியாத இளைஞர்கள், மே 22 ஆம் தேதி தேர்வில் பங்கேற்கலாம் என விமானப் படை அலுவலர்கள் தெரிவித்தனர்.
  இதுகுறித்து விமானப்படை விங் கமாண்டர் எஸ்.எஸ். நாயர் கூறியது:
  தமிழகம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களைச் சேர்ந்த 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் படித்த இளைஞர்கள் முகாமில் பங்கேற்கலாம். மே 20 ஆம் தேதி நடைபெற்ற முதல் நாள் தேர்வில் 3,500 இளைஞர்கள் பங்கேற்றனர். மே 23 ஆம் தேதி வரை இத்தேர்வு நடைபெறுகிறது. விமானப் படையில் சேருவதற்கான இத்தேர்வில் தமிழக இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
  விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்: விமானப் படை ஆள் சேர்ப்பு முகாமையொட்டி திருச்சி அண்ணா உள்விளையாட்டரங்கின் வெளிப்பகுதி, உள்பகுதிகளில் மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு காவல் துணை ஆணையர் பிரபாகரன் தலைமையில், 2 உதவி ஆணையர்கள், 4 ஆய்வாளர்கள் உள்பட 103 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai