Enable Javscript for better performance
'முத்தமிழைக் கடந்தும் வளர்கிறது தமிழ்'- Dinamani

சுடச்சுட

  

  இயல், இசை, நாடகத்தமிழ் என முத்தமிழைக் கடந்து தற்போது இணையத் தமிழ், அறிவியல் தமிழ் என தமிழ் வளர்ச்சியடைந்து வருகிறது என்றார் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சுப்பையா.
  திருச்சி தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீரங்கம் இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கின் வெள்ளிவிழா நிகழ்வில் பங்கேற்று, திருச்சிக்கு புகழ் சேர்க்கும் தமிழ் அமைப்புகளுக்கு விருதுகளை வழங்கி மேலும் அவர் பேசியது: ஒரு மாவட்டத்தில் ஒரு அமைப்பு மற்ற அமைப்புகளைப் பாராட்ட தயங்கும் நேரத்தில், திருச்சி மாவட்டத்தில் மற்ற தமிழ் அமைப்புகளைப் பாராட்டி விருதுகளை வழங்கும் இராசவேலர்- செண்பகத் தமிழ் அரங்கின் பணி பாராட்டுக்குரியது. அடுத்த தலைமுறைக்கு தமிழை சிதைவு இல்லாமல் கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டிருப்பதும் பாராட்டுக்குரியது.
  தமிழின் சிறப்பை இன்றைய இளைஞர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். தமிழ்மொழி அயல்நாடுகளிலும் சிறப்பு பெற்று விளங்குகிறது, சிங்கப்பூரில் ஆட்சிமொழியாக உள்ளது. மலேசியா, மொரீசியஸ் நாடுகளிலும் தமிழுக்குச் சிறப்பு உண்டு.
  கனடாவில் வாகன ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும்போதுகூட தமிழில் கேள்வி கேட்கப்படுகிறது. இயல், இசை, நாடகத்தமிழ் என முத்தமிழைக் கடந்து தற்போது இணையத் தமிழ், அறிவியல் தமிழ் என தமிழ் வளர்ச்சியடைந்து வருகிறது. 3000 மொழிகள் இருந்தாலும் 300 மொழிகள்தான் எழுத்துவடிவம் பெற்றன. அதில், தமிழ்மொழி சிறந்து விளங்குகிறது.
  தமிழ்ப் பண்பாடு, கலாசாரத்தை இளைஞர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். மேலும், திருக்குறளைப் பற்றியும் இலக்கிய அமைப்புகள், இலக்கியக் கழகங்கள் இளைஞர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்.
  பல நூல்களைக் காட்டிலும் வாழ்வியல் சிந்தனைகளை எடுத்துச் செல்வதில் முன்னணியில் இருப்பது திருக்குறள்தான். தமிழர்களின் அடையாளமாகத் திருக்குறள் விளங்குகிறது. எனவே, அடுத்த தலைமுறையினருக்கு திருக்குறளின் சிறப்பை கொண்டு செல்ல வேண்டும் என்றார் துணைவேந்தர். விழாவில், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 2014 ஆம் ஆண்டுக்கான செம்மொழித் தமிழாய்வு நிறுவன தொல்காப்பியர் விருதைப் பெற்ற பேராசிரியர் தட்சிணாமூர்த்திக்கும் விருது வழங்கப்பட்டது.
  முன்னதாக, கவிஞர் க. கோபண்ணன் தலைமையில் கவியரங்கமும், ப. சுப்பிரமணியன் தலைமையில் கருத்தரங்கமும் நடைபெற்றது. மாலையில், வழக்குரைஞர் க. ராசவேலு செண்பகவள்ளியின் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து, பணிகளுக்குத் துணை நின்ற நிறுவனங்களைப் பாராட்டி இராம.மு. கதிரேசன் பரிசுகளை வழங்கினார். வெள்ளி விழா மலர் மற்றும் செண்பகத் தாய் 108 நூலை முனைவர் சு. செயலாபதி வெளியிட்டார். முனைவர் ப. வேங்கடேசன் ஆய்வுசெய்து பேசினார்.
  த. கருணாநிதி நினைவு தமிழ்மாமணி விருதை எழுத்தாளர் பிரேமா நந்தகுமாருக்கும், புலவர் அ.கே. சேதுமாணிக்கனார் நினைவு தொல்காப்பியர் விருதை பி. தமிழகனுக்கும் வழங்கி முன்னாள் அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா பேசினார். மருத்துவர் இரா. கலைக்கோவன் வாழ்த்திப் பேசினார்.
  தொடர்ந்து, தமிழ் அமைப்புகள் அன்றும்- இன்றும் என்ற தலைப்பில் ஓம்சக்தி திங்களிதழ் இணையாசிரியர் பெ. சிதம்பரநாதன் பேசினார். கலைப் பண்பாட்டுத் துறை துணை இயக்குநர் இரா. குணசேகரன் தலைமையில், ரேவதி முத்துசாமி குழுவினர் இலக்கிய நடனமும் இடம்பெற்றது. முன்னதாக, செண்பகத் தமிழ் அரங்கின் பொறுப்பாளர் இராச. இளங்கோவன் வரவேற்றார். அ. கோபிநாத் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai