சுடச்சுட

  

  உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் போன்றவற்றால் உலக நாடுகளின் சட்டங்களை இந்தியாவில் பின்பற்றும் நிலை ஏற்படும் என்றார் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன்.
  திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் 3-வது மாநில மாநாட்டில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:
  இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு பி.வி. நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகுதான் பொருளாதார கொள்கைகள் வேகமாக மாறின. காங்கிரஸை தொடர்ந்து வந்த பாஜக அரசு, அப்பொருளாதார கொள்கைகளை, நடவடிக்கைகளை வேகமாக செயல்படுத்தி வருகிறது.
  பாஜக ஆட்சிக்கு வந்ததும் முதலில் திட்டக் குழுவை கலைத்து, அதற்குப் பதிலாக நிதி ஆயோக் அமைப்பை கொண்டுவந்தது. இதனால், தொழிலாளர் நலச் சட்டங்கள் எல்லாம் மாறி, வழிகாட்டுதலை உருவாக்கும் தீர்மானங்கள் மட்டும் வரும். சட்டப்படி உரிமை கேட்க முடியாத நிலை ஏற்படும்.
  மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் வரிகள் இல்லை. ஆனால், ரயில் கட்டணம், பெட்ரோல், டீசல் விலையை எப்போது வேண்டுமானாலும் உயர்த்திக்கொள்ள முடியும். காப்பீடு, வங்கி சேமிப்பு, சேவை துறைகளுக்கும் வரிகள் விதித்துள்ளனர். அரசுக்கு தினமும் வருவாய் செல்லும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
  டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையால் அமெரிக்க பெருநிறுவனங்களுக்கு தான் லாபமே தவிர நமக்கு இல்லை. உலகமயம், தாராளமயம், தனியார்மயம் காரணமாக இன்னும் 10 ஆண்டுகளில் உள்ளூர் சட்டங்கள் ஏதும் இருக்காது. உலக நாடுகளின் சட்டங்களைப் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும். அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தாமல், தரமான கல்வியை வழங்காமல், சுகாதாரம் பேணாமல் எந்த பலனும் ஏற்படாது என்றார் அவர்.
  காலையில் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டுக்கு தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளிக் கல்லூரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் இரா. சங்கரராஜன் தலைமை வகித்தார். வரவு செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் இ. முருகனும், மாநாட்டு அறிக்கையை மாநிலப் பொதுச் செயலர் மு. ராதாவும் வாசித்தனர்.
  தமிழ்நாடு தமிழ்வழிப் பள்ளி நிர்வாகிகள் சங்கத் தலைவர் அ.மு. முஸ்தபா கமல் வரவேற்றார். மாநிலத் துணைப் பொதுச் செயலர் தா. ஆதித்தன், மாநில துணைத் தலைவர்கள் மேரிதெரஸ், ராமலிங்கம், அல்போன்ஸ், மாநிலச் செயலர்கள் பிச்சையம்மாள், செல்லத்துரை, கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
  மாலையில் பொது மாநாட்டை டிஎன்பிடிஎப் அமைப்பின் மாநிலத் தலைவர் ச. மோசஸ் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
  புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 20 ஆண்டுகள் பணி முடிந்து ஓய்வு பெறுபவர்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும், மாநாட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜூன் 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரைநாள் தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  மாநாட்டு வரவேற்புக் குழு இணைச் செயலரும், மாநிலச் செயலருமான போ. ஆதிகுருசாமி வரவேற்றார். மாவட்டச் செயலர் மு. ஆறுமுகம் நன்றி கூறினார்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai