சுடச்சுட

    

    திருச்சி ஜங்ஷனில் மூடிக்கிடக்கும் டிக்கெட் கவுன்ட்டர்கள்

    By DIN  |   Published on : 24th May 2017 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மூடிக்கிடக்கும் டிக்கெட் கவுன்ட்டர்கள்-பயணிகளின் நீண்ட வரிசை- முறையான அறிவிப்பு பலகைகள் இல்லை; இதுதான் ரயில்வே கோட்டத்தின் தலைமையிடமான திருச்சி ஜங்ஷனில் தற்போதைய நிலை.
    திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் மாநிலத்தின் மத்தியில் அமைந்துள்ளதால், இரவு-பகல் 24 மணி நேரமும் ரயில் போக்குவரத்து இருக்கும். இதனால், ரயில் நிலையமானது, எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும். அதிலும், கோடைகாலத்தில் அதிகளவிலான கூட்டம் இருக்கும்.
    திருச்சி வழியாக தினசரி 50-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் உள்ளிட்ட 130-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.
    இங்கு முன்பதிவு மையத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர் மற்றும்  முன்பதிவில்லா டிக்கெட் கவுன்ட்டர்களில் சில மட்டுமே இயங்குகின்றன.
    இதனால், எப்போது டிக்கெட் எடுக்கச் சென்றாலும் அதற்கென பிரத்யேகமாக நேரம் ஒதுக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. நிலையத்தில் பெரும்பாலான டிக்கெட் கவுன்ட்டர்கள் மூடியே கிடக்கின்றன. குறிப்பாக, முன்பதிவில்லா டிக்கெட் எடுக்கும் கவுன்ட்டர்களில், தினசரி நீண்ட வரிசை காணப்படுவதால் சென்றவுடன் டிக்கெட் எடுக்க முடிவதில்லை. இதனால், பலரும் ரயிலை பிடிப்பதில் சிக்கல் நிலவுகிறது. ரயில் புறப்படுவதற்கு சுமார் அரை மணிநேரம் முன்னதாக வந்தால் மட்டுமே டிக்கெட் எடுத்து பயணிக்கும் நிலை உள்ளது. மொத்தம் 3 கவுன்ட்டர்கள் மட்டுமே இயங்குகின்றன.  இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
    கடந்தாண்டு கோடைகாலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும்விதமாக 5 கவுன்ட்டர்களும், பின்புற நுழைவாயிலில் (கல்லுக்குழி) 1 கவுன்டரும் என 6 கவுன்ட்டர்கள் செயல்பாட்டில் இருந்தன.
    ஆனால், இந்தாண்டு 3 கவுன்டர்கள் மட்டுமே இயங்குவதால், நேரமின்மை மற்றும் அதிக கூட்டம் காரணமாக பலரும் சுரங்கப்பாதை வழியே கல்லுக்குழி பகுதியில் உள்ள ஒரு கவுன்ட்டருக்கு சென்று, அங்கிருந்து டிக்கெட் பெற்று மூச்சிரைக்க ஓடிவந்து ரயிலை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அனைத்து  நேரங்களிலும் சாத்தியப்படுவதில்லை. குறிப்பாக, காலை நேரங்களில் பல்லவன், வைகை மற்றும் பயணிகள் ரயிலில் ஏற வரும் பயணிகள் பலரும் ரயிலை தவறவிடுகின்றனர். எனவே, கடந்தாண்டைப் போலவே அனைத்துக் கவுன்ட்டர்களையும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால், சிரமம் இல்லாமல் டிக்கெட் எடுக்க ஏதுவாக இருக்கும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
    மாயமான தகவல் பலகைகள்
     ரயில் நிலையத்தின் முன்பகுதி மற்றும் பின்பகுதியில் ஏராளமான தகவல் அறிவிப்பு ஒளிரும் பலகைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ரயில்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் அறிவிக்கப்பட்டு வந்தன.
    ஆனால், கடந்த பல மாதங்களாக கல்லுக்குழி பகுதியிலும், முன்புறப் பகுதியிலும் உள்ள அறிவிப்பு ஒளிரும் பலகைகளை காணவில்லை. அவை உரிய ஒப்பந்தம் முடிந்ததாலோ அல்லது வேறு காரணத்தினாலோ அகற்றப்பட்டு விட்டன. மேலும் இருக்கும் சில பலகைகளும் பழுது காரணமாக தகவல் அளிக்க முடியாத நிலையில் உள்ளன. இதனால், ஜங்ஷன் ரயில் நிலையத்திற்குள் வந்தால் மட்டுமே தேவையான தகவல்களை பெற முடியும் என்ற நிலையே கோட்டத்தின் தலைமையிடான திருச்சி ஜங்ஷனில் நிலவுகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai