சுடச்சுட

    

    ரூ. 50 லட்சம் மோசடி புகார்: நத்தம் விஸ்வநாதன் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு

    By DIN  |   Published on : 28th May 2017 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சோலார் பேனல்கள் அமைக்க நிலம் வாங்குவது தொடர்பாக ரூ. 50 லட்சம் மோசடி செய்ததாக வந்த புகாரை அடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 4 பேர் மீது திருச்சி போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருச்சி காஜாமலை பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் லோகநாதன். புதுகை மாவட்டம் இலுப்பூரில் உள்ள இவருக்குச் சொந்தமான இடத்தில் சோலார் பேனல்கள் அமைப்பது குறித்து 2015இல் காமராஜ் என்பவர் அணுகியுள்ளார்.
     காமராஜ் அப்போதைய தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பினாமி என்று அறிமுகப்படுத்தியுள்ளார்.
    பிறகு, சோலார் பேனல்கள் அமைக்க நிலம் வாங்கித் தரும்படி லோகநாதனிடம் ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார். இதையடுத்து லோகநாதன், ரூ.50 லட்சத்துக்கு மேல் முன்பணம் கொடுத்து தனது நிலத்துக்கு அருகில் உள்ள நிலஉரிமையாளர்களிடம் நிலத்தை வாங்கி ஆவணங்களை காமராஜிடம் கொடுத்துள்ளார். அதன்பின்னர் காமராஜ் தொடர்பு கொள்ளவும் இல்லை. பணத்தை திருப்பிக் கொடுக்கவும் இல்லையாம்.
    இதையடுத்து லோகநாதன் வழக்குரைஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காமராஜ் தரப்பிலிருந்து லோகநாதனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் அடிக்கடி மிரட்டல்கள் வந்துள்ளன. இதுகுறித்து கே.கே.நகர் காவல்நிலையத்திலும், காவல் உயர் அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
    இதையடுத்து, மோசடிக்கு காரணமாக இருந்த நத்தம் விஸ்வநாதன், அவரது ஆதரவாளர்கள் காமராஜ், அருண்குமார், பாஸ்கர் ஆகிய நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாவட்ட 2-ஆவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் லோகநாதன் வழக்கு தொடர்ந்தார்.
    வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர கண்ணன், மேற்கண்ட 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய கே.கே. நகர் போலீஸாருக்கு மே 25-ஆம் தேதி உத்தரவிட்டார்.
     இந்நிலையில், கே.கே. நகர் போலீஸார், அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், காமராஜ், அருண்குமார், பாஸ்கர் ஆகிய 4 பேர் மீதும் 506 பகுதி 2-மிரட்டுதல், 120-ஏமாற்றுவதற்காக சதித்திட்டம் தீட்டுதல், 448 -அத்துமீறுதல், 294 பி-ஆபாசமாக திட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai