சுடச்சுட

    

    பேரவையில் ஜெயலலிதா படத்தை வைப்பதில் தவறில்லை: பழ. நெடுமாறன்

    By DIN  |   Published on : 30th May 2017 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மறைந்த முதல்வர் என்ற அடிப்படையில் சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தை வைப்பதில் தவறில்லை என்றார் தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன்.
    திருச்சியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
    அனைத்து நதிநீர்ப் பிரச்னைகளுக்கும் ஒற்றை நடுவர் மன்றம் அமைப்பதென இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு காவிரிப் பாசன உழவர்களை மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கும்.
    எனவே, மத்திய அரசு இந்த முடிவை கைவிட வேண்டும். காவிரிப் படுகை பகுதிகளை பாழாக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் கைவிட வேண்டும்.
    பள்ளிக்கூடங்கள் முதல் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நாடாளுமன்றம் வரை எங்கும் எதிலும் இந்தி என்று நிலைநாட்டுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்கிறது.
    இது இந்தி பேசாத மக்களை இரண்டாம்தரக் குடிமக்களாக்கும் என்பதைச் சுட்டிக்காட்டி, ஆட்சிமன்றக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும், திருச்சி வருமானவரித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை (மே 31) போராட்டம் நடத்தப்படும்.
    தமிழ் அமைப்புகள், விவசாய அமைப்புகள் இப்போராட்டத்தை இணைந்து நடத்துகின்றன. தமிழகத்தின் உரிமைக்காக நடத்தப்படும் போராட்டத்தில் தமிழக மக்கள் பங்கேற்க வேண்டும்.
    ஜல்லிக்கட்டு தடையை நீக்க இளைஞர்கள், மாணவர்கள், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மகளிர் போராட்டம் போல, ஒரு தன்னெழுச்சி போராட்டம் நிச்சயம் தமிழகத்தில் நிகழும்.
    அந்த போராட்டம் மாற்றத்தை கொண்டுவர உதவும்.
    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பேரவைக்கு வராத கருணாநிதிக்கு பவளவிழா எதற்கு? முன்னாள் முதல்வர் என்ற முறையில் ஜெயலலிதாவின் படத்தை பேரவையில் வைப்பதில் தவறில்லை.
    உணவு உண்பது அவரவர் பண்பாடு, பழக்கவழக்கம், தனிப்பட்ட உரிமை.
    மாட்டு இறைச்சி போன்றவற்றுக்கு தடைவிதித்த மத்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. உத்தரவு ஒருசார்பாக இருந்தாலும் நடைமுறை சாத்தியமற்றது என்றார் நெடுமாறன்.
    பேட்டியின் போது, மாநில துணைத் தலைவர்கள் ம. பொன்னிறைவன், இறை எழிலன், மாநிலப் பொதுச் செயலர் சி. முருகேசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பெரியார் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai