சுடச்சுட

    

    மாட்டிறைச்சி விவகாரம்: தமிழக அரசின் கருத்தை தெளிவாக தெரிவிக்க வேண்டும்: முத்தரசன்

    By DIN  |   Published on : 30th May 2017 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசின் கருத்தை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்.
    இதுகுறித்து திருச்சியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியது:
    இறைச்சிக்காக கால்நடைகளை விற்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்.
    இத்தடை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, தனது கருத்தை தெளிவாகவும், வெளிப்படையாகவும் தெரிவிக்க வேண்டும்.
    இதேபோல, ஓ. பன்னீர்செல்வமும் தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும்.
    தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதற்கு மாநில அரசு மெளனம் சாதித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பிரதமர் மோடியின் தயவில் பதவியைத் தக்கவைக்கவே விரும்புகிறது. மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருப்பதில் தவறில்லை.
    அதேநேரத்தில், தங்களது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
    மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்ட வழக்கை திரும்பப் பெறவேண்டும்.
    அரசு நடத்தும் மணல் குவாரிகளில் குறைந்த விலைக்கு விற்கப்படும் மணல், வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
    இதை தடுத்து, நியாயமான விலையில் மணலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    தமிழகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக ஜூன் 2,3 ஆம் தேதிகளில் சென்னையில் மாநில நிர்வாகக் குழு கூட்டமும், ஜூன் 7, 8 ஆம் தேதிகளில் கோவையில் மாநிலக் குழு கூட்டமும் நடைபெறுகிறது.
    இவற்றில் அடுத்தகட்ட பிரசாரம், போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார் முத்தரசன்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai