திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வீரப்பூர் கோயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை திருடப்பட்டுள்ளது.
திருச்சி தில்லைநகர் 7 ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் அழகேசன் மகன் கணேஷ். இவர் பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தாருடன் மணப்பாறை அடுத்த வீரப்பூர் பெரிய காண்டியம்மன் கோயிலுக்கு வந்துள்ளார். அங்கு வழிபாட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும், காரில் இருந்த சுமார் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 2 மடிக்கணினிகள், ஆப்பிள் நிறுவன ஐ பேட், ஒரு கேமரா மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது.
புகாரின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.