தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர்சங்கம் சார்பில் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்ட தொழிலாளர் சந்திப்பு இயக்கத்தை டிசம்பர் வரை தொடர்ந்து நடத்துவதென அச்சங்கம் முடிவு செய்துள்ளது.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள் :
கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பயன் அடையாமல் உள்ளனர். எனவே அவர்களை நலவாரியத்தில் சேர்க்க வேண்டும், உறுப்பினர் பதிவை புதுப்பிக்காதவர்களுக்குப் புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளவும், ஓய்வூதியம் உள்ளிட்ட உதவிகள் கிடைக்கும் வகையிலும் கடந்த ஜூலை மாதம் தொடங்கிய தொழிலாளர் சந்திப்பு இயக்கத்தை டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து நடத்துவது, அனைத்துத் தொழிலாளர்களையும் நலவாரியத்தில் சேர்ப்பது, வேலையிடத்தில் விபத்தில் சிக்கி மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும், சிகிச்சை பலனின்றி இறந்து போன தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்ச்ம உதவித் தொகை வழங்கப்படும் என வெளியிட்ட தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிப்பது என்பனஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு மாநிலத் துணைத் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் கே.ரவி, மாநிலத் துணைப் பொதுச் செயலர் செல்வராஜ், பொருளாளர் இரா. முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாநிலச் செயலர்கள் முனுசாமி,சேது, பாலன், தில்லைவனம், துணைத் தலைவர் க.சுரேஷ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.