மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதிக்கும் மட்டுமல்லாது, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் திருச்சிக்கும் பெரிதும் தொடர்புகள் இருந்திருக்கின்றன.
கல்லக்குடிகொண்ட கருணாநிதி என்ற பெயரை இன்றும் தாங்கியிருக்கும் திருச்சி மாவட்டத்தில் கல்லக்குடி அடங்கியிருக்கிறது. திமுக சார்பில் இதுவரை நடத்தப்பட்ட10 மாநாடுகளில் 5 மாநாடுகள் திருச்சியில் நடைபெற்றிருக்கின்றன. 10 மாநாடுகளில் 6 மாநாட்டுகளின் தலைவராக இருந்தவரும் கருணாநிதி.
திராவிட முன்னேற்றக் கழகம் 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டிருந்தாலும், கட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முடிவை எடுத்தது திருச்சியில் 1956 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில்தான். இந்த மாநாட்டில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் போட்டியிடலாம் என்ற ஒப்புதலைத் தந்தது.
1956 ஆம் ஆண்டில் மே மாதத்தில் 4 நாள்கள் நடைபெற்ற இந்த மாநாடு ரேஸ்கோர்ஸ் சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியினரிடம் நடத்திய வாக்கெடுப்பில், திமுக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று 56,942 பேர் வாக்களித்திருந்தனர். போட்டியிட வேண்டாம் என 4203 பேர் வாக்களித்திருந்தனர். இதில் கிடைத்த ஒப்புதலைத் தொடர்ந்து, திமுகவினர் தேர்தல் களத்தில் ஈடுபட்டனர்.
நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி வெற்றி பெற்றாலும், 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் திமுக பெரிய வெற்றியைப் பெற்று, திமுகவின் நிறுவனர் அண்ணாவின் தலைமையில் திமுக ஆட்சியும் அமைந்தது.
1969 ஆம் ஆண்டில் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், 1970 ஆம் ஆண்டில் திருச்சியில் மீண்டும் திமுகவின் ஐந்தாவது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் எழுப்பப்பட்ட ஐம்பெரும் முழக்கங்கள்தான் திமுகவை நீட்டித்த கொள்கையாக இன்றும் நிலைத்திருக்கிறது.
அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைப்போம், இந்தித் திணப்பை என்றும் எதிர்போம், வன்முறையைத் தவிர்த்து வறுமையை வெல்வோம், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி ஆகிய ஐம்பெரும் முழக்கங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து, 1990 ஆம் ஆண்டு திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் திருப்புமுனை மாநாடு என்ற பெயரில் திமுக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு நடைபெற்ற அடுத்தாண்டிலேயே 1991 மே மாதத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தமிழகத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தந்ததாகக் கூறி திமுக அரசு கலைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 1996 ஆம் ஆண்டில் திருச்சி -புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுகவின் மாநாடு அக்கட்சிக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது. அப்போதைய அதிமுக அரசு மீதான மக்கள் கோபத்தால் திமுக- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் பொறுப்பேற்றார். இந்த காலத்தில் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. சமத்துவபுரம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் போன்றவை தொடங்கப்பட்டன.
இதையடுத்து, மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்து வந்த திமுக, திருச்சியில் 2006 ஆம் ஆண்டு மீண்டும் மாநில மாநாட்டை நடத்தியது. திருச்சி விமான நிலையம் அருகே அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான பந்தலில் நடைபெற்ற திமுக மாநாட்டில் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த சோனியாகாந்தி பங்கேற்று பேசினர். இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் திமுக பெரிய வெற்றியை ஆட்சியைக் கைப்பற்றியது.
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியது, கலைஞர் வீடு வழங்கும் திட்டம் போன்ற மக்கள் நலத்திட்டங்கள் இந்த ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டன. தொடக்கத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், பின்னால் தமிழகத்தின் துணை முதல்வராகவும் தரம் உயர்த்தப்பட்டதும் இந்த ஆட்சியில்தான்.
திமுக சார்பில் இதுவரை 11 மாநாடுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 10 ஆவது மாநில மாநாடும் திருச்சியில்தான் நடைபெற்றது. 2014, பிப்ரவரி 15,16 தேதிகளி திருச்சி தீரன்நகர் பகுதியில் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக அரசின் மக்கள் விரோத போக்குகள், நீதிமன்றங்களின் கண்டனங்கள், மத்தியில் மதசார்பற்ற அரசு அமைவதன் நோக்கம் குறித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து 2014 மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டது. ஒரு இடங்களில் கூட வெற்றியை பெற முடியாத நிலைக்குத் திமுக தள்ளப்பட்டது. இதன் பின்னர், 2016 ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை என்றாலும் 89 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய எதிர்க்கட்சியாகவும் உருவெடுத்தது.
திருச்சியில் நடைபெற்ற திமுகவின் மாநில மாநாடுகள் மட்டுமல்லாது, கட்சி சார்பிலான விழாக்களில் பங்கேற்றாலும், அரசு விழாக்களில் பங்கேற்றாலும் திருச்சியோடு தனக்கும், தன்னுடன் இணைந்து கட்சிப் பணியாற்றிய பல்வேறு தலைவர்களையும், திரைத்துறையில் இருந்து திருச்சிக்கு வந்த போது செய்த பணிகளையும் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி குறிப்பிடாமல் இருந்தது இல்லை. அவருக்கு பல்வேறு வகைகளில் திருப்புமுனையைத் தந்தது திருச்சிதான்.