திருச்சியில் கடைகள் அடைப்பு; பேருந்துகள் நிறுத்தம்: கருப்புக் கொடிகளுடன் அஞ்சலி

திமுக தலைவர் மு. கருணாநிதி காலமானார் என்ற அறிவிப்பு வந்தவுடன் திருச்சி மாநகர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை
Published on

திமுக தலைவர் மு. கருணாநிதி காலமானார் என்ற அறிவிப்பு வந்தவுடன் திருச்சி மாநகர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாலை கடைகள் அடைக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அந்தந்த பணிமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் மேலும் பின்னடைவு அடைந்துள்ளதாக மாலையில் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியானவுடன் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் உடனடியாக அடைக்க உத்தரவிடப்பட்டதால் திருச்சி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன.
அரைக்கம்பத்தில் கட்சிக் கொடி: மாலை 6.10 மணிக்கு திமுக தலைவர் காலமானார் என்று அறிவிக்கப்பட்டவுடன் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மாநகர், மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களில் ஏற்றப்பட்டிருந்த கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. கொடிக்கம்பங்களுக்கு கீழே கருணாநிதியின் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பெரியகடை வீதியில் இளைஞர்கள் பலரும் கருணாநிதியின் முகமூடி அணிந்து உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
கருப்புக் கொடி: கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன் மட்டுமின்றி கருப்புக் கொடிகளும் ஆங்காங்கே பறக்கவிடப்பட்டன. சாலை சந்திப்புகள், கட்சிக் கிளைகள், ஆட்டோ நிறுத்தம், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டன. காந்தி மார்க்கெட் பகுதியில் வெங்காயமண்டி சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அனைத்து இடங்களிலும் கருப்புக் கொடி கட்டப்பட்டது. இதுமட்டுமல்லாது கட்சித் தொண்டர்கள் பெரிய அளவிலான கருப்புக்கொடிகளையும், கட்சிக் கொடிகளையும் தாங்கியபடி இருசக்கர வாகனங்களில் திருச்சி மாநகர வீதிகளில் வலம் வந்தனர்.
பேருந்துகள் நிறுத்தம்: மாலை 5.30 மணிக்கே சென்னை செல்லும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டன. மாலை 6.30 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்த அரசுப் பேருந்துகள் அனைத்தும் பயணிகளை இறக்கிவிட்டு அவசரம், அவசரமாக பணிமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. நகரப் பேருந்துகளின் இயக்கமும் படிப்படியாக குறைக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு மேல் ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இரவு 10 மணிக்கு மேல் முழுமையாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. வெளியூர் செல்லும் பயணிகள் அனைவரும் பரிதவிக்க நேரிட்டது. பெண்கள் குழந்தைகளுடன் பாதுகாப்பான இடம் தேடி தனியார் விடுதிகளுக்கு சென்றனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி முடித்துச் சென்ற ஊழியர்கள் பாதசாரியாகவே வீடுகளுக்கு திரும்ப நேரிட்டது. வெளியூர் பணிமனைகளுக்கு செல்ல வேண்டிய அரசுப்பேருந்துகள் இருக்கும் பயணிகளுடன் அவரமாக புறப்பட்டுச் சென்றன.
பெட்ரோலுக்கு நீண்ட வரிசை: பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் நிலையங்களில் இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் நிரப்பும் சூழல் ஏற்பட்டது. அனைத்து விற்பனை நிலையங்களிலும் வாகன ஓட்டிகள் அலைமோதினர். அவரவர் வாகனங்களில் முடிந்தளவுக்கு எரிபொருளை நிரப்பிச் சென்றனர்.
கடைகள் முழுமையாக அடைப்பு:  திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், மலைக்கோட்டை, பெரியகடை வீதி, என்எஸ்பி சாலை, சின்னக்கடை வீதி, மேலரண் சாலை, கீழரண்சாலை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, கண்டோன்மென்ட், ஜங்ஷன் என மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. சிறிய பெட்டிக்கடை முதல் பெரும் வணிக வளாகங்கள் வரை அனைத்துமே மாலையில் உடனடியாக அடைக்கப்பட்டன. பணிபுரியும் ஊழியர்களும் அவசரம், அவசரமாக புறப்பட்டுச் சென்றனர். திருச்சி மாநகரம் முழுவதும்  அமைதிநிலவியது. ஆங்காங்கே தொண்டர்கள் கருணாநிதி உருவப்படத்தை பார்த்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர்.
பலத்த பாதுகாப்பு: திருச்சி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருச்சி மத்திய பேருந்துநிலையம், சத்திரம் பேருந்துநிலையப் பகுதிகளில் வஜ்ரா வாகனத்துடன் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்