தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அளித்து நிலுவை மனுக்கள் குறித்து ஆணையத்தின் மாநிலத் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் ஆய்வு செய்தார்.
குடும்ப வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் , நிலுவை மனுக்கள் மீதான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மனுக்கள் குறித்து விசாரணை நடத்திய கண்ணகி பாக்கியநாதன், இந்த மனுக்கள் மீது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட சமூக நல அலுவலரை அறிவுறுத்தினார்.
குடும்ப வன்கொடுமையால் பாதிக்கப்படும் மகளிருக்கு விசாரணை செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க சமூக நலத்துறை மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், வரதட்சணை கொடுமையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் வகையில், மாவட்ட சமூக நல அலுவலர்கள் மாவட்ட வரதட்சணை தடுப்பு அலுவலர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பணியிடங்களில் பாலியல் கொடுமைக்கு உள்படுத்தப்படும் மகளிருக்கு விசாரணை செய்து நிவாரணம் கிடைக்க மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. எனவே பாதிக்கப்படும் மகளிர், சம்பந்தப்பட்ட அலுவலரை அணுகி உரிய நிவாரணத்தை பெறலாம் என்று மாநில மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.