Enable Javscript for better performance
விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞர் கைது

    By DIN  |   Published on : 24th March 2018 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக லால்குடியைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பில், சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், 2 மணிநேரத்தில் அவை வெடிக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டது. போனில் பேசிய மர்ம நபர் தனது பெயரையும், ஊரையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 விமானநிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன.
    இதன்படி, திருச்சி விமான நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விமான நிலைய பாதுகாப்புப் பிரிவு போலீஸார், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை போலீஸார், தமிழகக் காவல்துறையின் திருச்சி மாவட்ட போலீஸார் என முத்தரப்பும் விமான நிலையத்திலும், வளாகத்திலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளின் கொண்டுவந்த உடமைகளில் வெடிகுண்டுகள் ஏதேனும் உள்ளதா என்பதை வெடிகுண்டுகளை கண்டறியும் மோப்பநாய் மூலமும், வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலமும் அனைத்து இடங்களிலும் சோதனையிட்டனர். இதேபோல, சென்னை, மதுரை விமான நிலையங்களிலும் சோதனை நடைபெற்றது. ஆனால், வெடிகுண்டு எதுவும் கிடைக்கப்படவில்லை.
    கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பு குறித்து விசாரணை நடத்தியதில், அந்த தொலைபேசி அழைப்பானது திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள பூவாளூரிலிருந்து வந்திருப்பது தெரியவந்தது. செல்லிடப்பேசி கோபுரம் மற்றும் செல்லிடப்பேசி எண் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் மிரட்டல் விடுத்த நபர் பூவாளூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் (30) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து லால்குடி போலீஸார் அவரது வீட்டுக்கு சென்று இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் மது போதையில் இருந்துள்ளார். இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர், கடந்த சில மாதங்களாக பணிக்கு செல்லாமல் மதுப் பழக்கத்துக்கு அடிமையானதாக அவரது தந்தை தெரிவித்தார். இதையடுத்து இளைஞரை காவல்நிலையம் அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai