Enable Javscript for better performance
பங்குனி உத்திரப் பெருவிழா: வயலூர் முருகன் கோயிலல் பக்தர்கள் நேர்த்திக்கடன்- Dinamani

சுடச்சுட

    

    பங்குனி உத்திரப் பெருவிழா: வயலூர் முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

    By DIN  |   Published on : 31st March 2018 09:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சியை அடுத்துள்ள குமாரவயலூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகுகுத்தியும் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
    இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு  நடை திறக்கப்பட்டு அருள்மிகு சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 8 மணி முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தும்விதமாக பால்காவடி எடுத்தும், அலகுகுத்தியும் வந்தனர். மேலும், ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர்கள் கொண்டு வந்த பாலால் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
    தொடர்ந்து வள்ளி, தெய்வ சேனா சமேதராய் பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சியளித்தார். இதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா நடைபெற்றது. 
    இதையடுத்து சனிக்கிழமை உபயதாரர்களின் அபிஷேகம் நடைபெறுகிறது. ஏப்.1 ஆம் தேதி வள்ளி நாயகி தினைப்புனம் காத்தலும், 2 ஆம் தேதி இரவு 8 மணிக்கு வேலன் விருத்தனாக வருதல், யானை விரட்டுதல் பின்னர் பக்தர்களுக்கு காட்சியளித்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 3 ஆம் தேதி வள்ளித் திருக்கல்யாண உற்ஸவமும் நடைபெறுகிறது. 
    அன்னதானம்: விழாவை முன்னிட்டு இனாம்புலியூர் வாணியர் சங்கம் சார்பில் 80ஆவது ஆண்டாக அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, சங்கத்தலைவர் புலியூர் நாகராஜன் தலைமை வகித்தார். வாணியர் பேரவை தலைவர் பன்னீர்செல்வம் குத்துவிளக்கேற்றினார். மாவட்ட வருவாய் அலுவலர் அ. பஷீர், கூட்டுறவுச் சங்க இணைப்பதிவாளர் கே.சி. ரவிச்சந்திரன் ஆகியோர் அன்னதானத்தை தொடக்கி வைத்தனர். சங்க நிர்வாகிகள் நடேசன், சண்முகம், ராமநாதன், முத்துகிருஷ்ணன், செல்வராஜ் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
    கோலாகலம்: இதேபோல, திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு முருகன் கோயில்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலமாக நடைபெற்றது. 
    திருவானைக்கா, மேலக் கொண்டயம்பேட்டை அருள் மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது. இதையொட்டி, பக்தர்கள் பால்குடம்,  காவடி களுடன்பூக்குழி இறங்கினர். இரவு 9 மணியளவில் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai