Enable Javscript for better performance
ராஜிநாமாவுக்கு தயார்: ப.குமார் எம்பி- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கட்சியின் தலைமை உத்தரவிட்டால் ராஜிநாமா செய்ய தயாராக இருப்பதாக திருச்சி மக்களவை உறுப்பினர் ப.குமார் தெரிவித்தார்.
    இதுதொடர்பாக, அவர் கூறியது: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி மார்ச் 30ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து அவையை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். இருப்பினும், வாரியம் அமைப்பதற்கான பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த விவகாரத்தின் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து முதல்வரும், துணை முதல்வரும் தெளிவாகக்கூறியுள்ளனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.
    இருப்பினும், மக்களவை உறுப்பினர்கள் என்ற தார்மீக அடிப்படையில் எங்களது பதவியை ராஜிநாமா செய்ய எப்போதும் தயாராக இருப்பதாக முதல்வரிடமும், துணை முதல்வரிடமும் உறுதியளித்துள்ளோம். எழுத்துப்பூர்வமாக எந்த கடிதமும் வழங்கவில்லை. ஆனால், கட்சித் தலைமை உத்தரவிட்டால் ராஜிநாமா செய்ய தயாராக
    உள்ளேன். இந்தப் பிரச்னை தொடர்பாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. இதன்படி, திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சியில் ஏப்.3ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். தமிழகத்தின் ஜீவாதார உரிமை எந்த இடத்திலும் பறிபோக விடமாட்டோம். அதற்காக அதிமுக மக்களவை உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai