Enable Javscript for better performance
சூட்ஸ் திட்டத்தில் மாநிலத்தில் முதலிடம்: 36 மாணவர்களுக்கு தங்கம், 21 பள்ளிகளுக்கு கோப்பை- Dinamani

சுடச்சுட

    

    சூட்ஸ் திட்டத்தில் மாநிலத்தில் முதலிடம்: 36 மாணவர்களுக்கு தங்கம், 21 பள்ளிகளுக்கு கோப்பை

    By DIN  |   Published on : 18th May 2018 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாரதிதாசன் பல்கலைக் கழகம் சார்பில், செயல்படுத்தப்படும்  சூட்ஸ் திட்டத்தில் கணினி அறிவியல் பயிற்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்ற 36 மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கமும், 21 பள்ளிகளுக்கு கோப்பைகளும் வழங்கப்பட்டன.
    பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் தொழில்முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம் (ஐஇசிடி) மூலம், பள்ளிகள், பல்கலைக் கழகம், தொழில்நிறுவனங்களை இணைத்து சிறப்புத் திட்டம் (சூட்ஸ்) 2009-10 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. 
    இத் திட்டத்தின்படி, தமிழகம் முழுவதும் உள்ள 5 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக பல்கலைக் கழக நிர்வாகம், தமிழகம் முழுவதும் 381 பள்ளிகளைத் தேர்வு செய்து அந்தந்தப் பகுதி தொழில் நிறுவனங்களை இணைத்துப் பயிற்சி அளித்து வருகிறது.
    இத்திட்டத்தின் 9 ஆவது ஆண்டாக நிகழாண்டு மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 4 ஆயிரத்து 281 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், சிறப்பாக பயிற்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த 8 மாணவர்கள், 28 மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதேபோல 21 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாகத் தேர்வு செய்யப்பட்டு கோப்பைகளும் வழங்கப்பட்டன. 
    திருச்சி காஜாமலை வளாகத்தில் உள்ள பல்கலைக் கழக ஐஇசிடி மையத்தில் நடைபெற்ற விழாவில், பல்கலைக்கழக துணைவேந்தர் பி. மணிசங்கர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கி பேசியது:
    நிகழாண்டு அடிப்படைக் கணினி பயிற்சியில் 19,853 பேர், ஆபிஸ் ஆட்டோமேஷன் பிரிவில் 23,179 பேர், சி புரோகிராமிங் பயிற்சியில் 15,480 பேர், வெப் டிசைன் பிரிவில் 7,544 பேர், கிராபிக் டிசைன் பிரிவில் 5,653 பேர், புரோகிராமிங் டெக்னிக் பிரிவில் 16,114 பேர் மாநிலம் முழுவதும் பயன் பெற்றுள்ளனர். 
    இவர்களுக்கு சென்னை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருச்செங்கோடு, கோவையைச் சேர்ந்த நிறுவனங்கள் பயிற்சியளித்து ஊக்குவித்திருப்பது பாராட்டுக்குரியது. இத்திட்டத்தில் ஆண்டுதோறும் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று கணினி அறிவை வளர்த்துக் கொள்வதுடன், வேலைவாய்ப்பு பெறும் வகையில் தொழில்பயிற்சியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
    நிகழ்ச்சியில் பல்கலைக் கழகப் பதிவாளர் கோபிநாத் கணபதி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ச. சசிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai