Enable Javscript for better performance
தூக்குக் கயிறுடன் விவசாயிகள் நூதனப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் தூக்குக் கயிறுடன் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில், திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே வியாழக்கிழமை நடைபெற்ற  போராட்டத்துக்கு சங்க மாநிலத் தலைவர் பூ. விசுவநாதன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் வே. உலகநாதன், மாநில துணைச் செயலர்கள் சுப்பிரமணி, ராஜேந்திரன், மாநில துணைத் தலைவர் சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    தமிழகத்தில் உள்ள 2 ஆயிரம் ஏரிகளை ரூ.300 கோடியில் தூர்வாரி, புனரமைக்கும் பணிகளை தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். நிகழாண்டு குறுவை சாகுபடிக்கு கர்நாடகத்திலிருந்து காவிரி நீர் பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, அதன் தலைமையகத்தை புதுதில்லியில் நிறுவ வேண்டும். அரியலூர் மாவட்டம் பொன்னாறுதலைப்பில் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். பெரம்பலூர் மாவட்டம், சின்னமுட்லு பகுதியிலும் அணை கட்ட வேண்டும். மழைநீர் வீணாகாமல் சேகரிக்க கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியை ஆழப்படுத்த வேண்டும். விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணையாறு கிளை வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும். செய்யாறு தண்ணீரை ஆலத்தூர், ஊசாம்பாடி, துரிஞ்சாபுரம் வழியாக கீழ்பொன்நாத்தூர் தாலுகா பகுதி ஏரிகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும். காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். நாகை மாவட்டம், குமாரமங்கலம் ஆதனூர் தடுப்பணை பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும். கரூர் மாவட்டம் பெரியதாதாம்பாளையம் ஏரியைத் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
    இதில் திருச்சி,கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள சங்க நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டியபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai