"தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி உறுதி'

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுவிட்டதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர் சஞ்சய் தத் தெரிவித்தார்.
திருச்சி மாநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்திலும், பின்னர், செய்தியாளர்களிடமும் சஞ்சய் தத் கூறியது: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இல்லை என்றாலும் காங்கிரஸ் கட்சிக்கு என்ற மரியாதை இப்போதும் உள்ளது. இக் கட்சிக்கான பலத்தை தமிழகத்தில் மீண்டும் வலுப்படுத்த சரியான காலம் வந்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டியில் பல்வேறு தலைவர்கள் இருந்தாலும், கட்சிக்குள் எவ்வித வேறுபாடுகளும் இல்லை. ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கை முன்வைத்து தமிழக காங்கிரஸார் மட்டுமின்றி, ஒட்டுமொத்த காங்கிரஸ் நிர்வாகிகளும் செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் வாக்குச் சாவடி வாரியாக காங்கிரஸ் கட்சிக்கான செயல்வீரர்களை நியமனம் செய்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் அதிமுக-வும், மத்தியில் பாஜக-வும் ஊழலில் திளைத்து வருகின்றன. இந்த இரு கட்சிகளையும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் ஒன்றைகூட பாஜக நிறைவேற்றவில்லை. அத்தியாவசிய பொருள்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துவிட்டது.  ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில தேர்தல் தொடர்பாக நடந்த கருத்துக் கணப்பில் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களை கைப்பற்றும் என தெரியவந்துள்ளது. இதேபோல, மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராக வருவது உறுதி. 
மத்திய அரசானது தமிழகத்தை அனைத்து நிலைகளிலும் புறக்கணித்து வருகிறது. தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை முறையாக வழங்காமல் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு திருப்பி அனுப்புகிறது. ஆனால், தமிழகத்தில் ஆளும் அதிமுக-வின் ரிமோட் கன்ட்ரோலாக பாஜக செயல்படுகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் திமுக-வுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் காண்போம். தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக இரு கட்சிகளின் தலைமை முடிவு செய்யும் என்றார் அவர்.
கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் ஜவஹர், கலை, கோவிந்தராஜன் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com