திருச்சி முக்கொம்பில் ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் ஆய்வு

திருச்சி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் தற்காலிக சீரமைப்புப் பணி நடைபெற்று வரும் பகுதிகளையும்

திருச்சி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் தற்காலிக சீரமைப்புப் பணி நடைபெற்று வரும் பகுதிகளையும், புதிய அணை அமைய உள்ள இடத்தையும் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர்கள் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் உள்ள 9 மதகுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி இடிந்து விழுந்தன. இதைத் தொடர்ந்து  தற்காலிக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், அதன்அருகிலேயே  ரூ.410 கோடியில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் பணிக்கான பூர்வாங்கப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் கட்டுமானப் பொறியியல் துறைப் பேராசிரியர்கள்  ஏ. பூமிநாதன் (புவித்தொழில்நுட்பப் பொறியியல்), மேஜர் பத்மநாபன் ஆகிய இருவரும் சனிக்கிழமை  முக்கொம்பு மேலணைக்கு வந்தனர்.
மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் பாலம் இடிந்து விழுந்த பகுதி, மதகுகள் விழுந்த பகுதி, அதைத் தொடர்ந்து வெளியேறும் தண்ணீரைக் கட்டுப்படுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள்,  தற்காலிகத் தடுப்புப் பகுதிகள் போன்றவற்றையும், புதிய தடுப்பணை அமையும் பகுதியும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது: முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே  உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், புதிய அணைக்கான பணிகள் என இரண்டையும் தனித்தனியே பிரித்துபார்க்காமல், இரண்டிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், இனி செய்ய வேண்டிய பணிகள்,  பூகோள ரீதியில் செய்யப்பட வேண்டியவை குறித்து ஆய்வு செய்தோம்.
தற்காலிக தடுப்புப் பாலம் பலமாக அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பான முறையில் தடுப்பு நடவடிக்கைகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டிருக்கின்றனர். பொதுப்பணித்துறையினரின் சிறப்பான இந்த பணி குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.
கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக தற்காலிக தடுப்புப்பாலம் உடைந்துவிடுமோ என்று விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. அவற்றையெல்லாம் தாங்கும் அளவிற்கு தடுப்புப் பாலம் வலுவாக அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிகத் தடுப்பணை  மற்றும் புதிய தடுப்பணை குறித்த எங்கள் ஆய்வு முடிவுகளை இன்னும் 2 அல்லது 3 வாரங்களுக்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம் என்றனர்.
தொடர்ந்து, பொதுப்பணித்துறை திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளர்  ஆர். செந்தில்குமார்,  சிறப்புத் தலைமைப் பொறியாளர் பி. ரவிச்சந்திரன், செயற்பொறியாளர்கள் சண்முகவடிவேல், தி.பெ.கணேசன்,  செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com