தத்கல் மின் இணைப்பை விரைந்து வழங்க வலியுறுத்தல்

தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று

தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று தமாகா சார்பில் மின் வாரிய அதிகாரியிடம் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
திருச்சி தென்னூரிலுள்ள தமிழ்நாடு மின்வாரியத் தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் மனு அளிக்க தமாகா விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் புலியூர் ஏ.நாகராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்தனர். 
அவர் அலுவலகத்தில் இல்லாத நிலையில், செயற்பொறியாளர் ( மின் திட்டம்) பொன்.ஜெயமேரியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது: தத்கல் திட்டத்தில் மாநிலம் முழுவதும் 10,000 விவசாயிகளும், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் 6,335 விவசாயிகளும் மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்து, அதற்கான தொகையையும் செலுத்தியுள்ளனர்.
குறுவைத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உடனடி மின் இணைப்பு வழங்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அரசு கூறியிருந்த நிலையில், மின் இணைப்புக் கோரி 45 நாள்களுக்கு முன்பாக மின் வாரியத்தில் பணம் கட்டிய விவசாயிகளுக்கு இதுவரையிலும் மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. 
முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் பாலம் மற்றும் மதகுகள் உடைந்த நிலையில்,  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் 5,000 ஏக்கரில்போடப்பட்ட பாய் நாற்றாங்கால், நேரடி விதைப்பு நாற்றாங்கால், நெல் நாற்றுகள் தண்ணீர் இல்லாமல் முற்றிலும் காய்ந்துவிட்டது.
தண்ணீரும் வராத நிலையில், மின் இணைப்பும் இல்லாததால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே தத்கல் முறையில் மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது , கட்சியின் விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவர் புங்கனூர் செல்வம், துணைத் தலைவர் அழகப்பன், இளைரணித் தலைவர் தனசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com