ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாகை, கடலூரில் செப்.28-இல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை  ரத்து செய்ய வலியுறுத்தி நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை  ரத்து செய்ய வலியுறுத்தி நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் செப்டம்பர் 28 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை இச்சங்கத்தின் மாநிலத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான எஸ். குணசேகரன் தலைமையில் நடைபெற்ற மாநில நிர்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள் : ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் எல்லா வகையான எரிவாயு உள்ளிட்ட அனைத்து கனிமங்களையும் பூமியிலிருந்து எடுத்திட பொது உரிமத்தை மத்திய அரசு தற்போது வழங்கியுள்ளது.  நாகை மாவட்டத்தின் வடக்குப் பகுதியிலும், கடலூர் மாவட்டத்தின் தெற்குப் பகுதியிலும் இதற்கான பணிகள் தொடங்க உள்ளன. எனவே, மத்தியஅரசின் செயலைக் கண்டித்தும், இத்திட்டத்தை கைவிடக் கோரியும் செப்டம்பர் 28 ஆம் தேதி நாகை மாவட்டம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டம், சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 
மேட்டூர் அணையிலிருந்து சுமார் 180 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டும், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீரை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. டெல்டா பகுதிகளில் சம்பா நெல் விதை தெளிப்பு, நாற்றுத்தெளிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், காவிரியில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன. எனவே காவிரியில் தேவையான அளவு தண்ணீர் திறந்துவிடுவதுடன்,கடைமடைப் பகுதி வரை தண்ணீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும். 
அணைகளைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து மணல் குவாரிகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். பாலாற்றில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  தமிழக அரசின் அனுமதி பெறாமல் கட்டுமானப் பணிகளை ஆந்திர அரசு மேற்கொள்வது தமிழகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும். 
எனவே உயர்த்தி கட்டியுள்ள தடுப்பணையை அம் மாநில அரசு அகற்ற வேண்டும் என்பனஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் மாநிலப்பொதுச் செயலர் வே.துரைமாணிக்கம்  வேலை அறிக்கை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசினார். மாநிலத் துணைச் செயலர்கள் பி. மாசிலாமணி, த. இந்திரஜித்,  நல்லையா, துணைத் தலைவர்கள் தி.பெருப்படையார், சி.எம்.துளசிமணி, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அயிலை சிவசூரியன், நாகை எஸ். சம்மந்தம்,  மதுரை ஜெயக்கொடி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com