பொதுமக்களுக்கு  இடையூறு ஏற்படுத்தியதாக வழக்கு: தேமுதிக துணைச் செயலர் எல்.கே.சுதீஷ் உள்பட 7 பேர் விடுதலை

திருச்சியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிலவேம்பு கசாயம் வழங்கியதாக தொடரப்பட்ட

திருச்சியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிலவேம்பு கசாயம் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தேமுதிக துணைச் செயலர் எல்.கே.சுதீஷ் உள்பட 7 பேர் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். 
டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில், 2017 அக்.12ஆம் தேதி திருச்சி மலைக்கோட்டை தேமுதிக சார்பில் காந்திமார்க்கெட் பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற கட்சியின் மாநிலத் துணைச் செயலர் எல்.கே.சுதீஷ், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாகவும், பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி காந்திமார்க்கெட் காவல் துறையினர், தேமுதிக துணைச் செயலர் எல்.கே.சுதீஷ். மாநகர் மாவட்டச் செயலர் டி.வி.கணேஷ், அவைத் தலைவர் அலங்கராஜ், பொருளாளர் மில்டன்குமார், மலைக்கோட்டை பகுதிச் செயலர் நூர்முகமது, வட்டச் செயலர் வெல்டிங் சிவா மற்றும் ராஜா ஆகிய 7 பேர் மீது 4 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.
திருச்சி ஐந்தாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. 
அதன்படி, தேமுதிக துணைச் செயலர் எல்.கே. சுதீஷ் உள்பட 7 பேரும் 5ஆவது நீதித்துறை நடுவர்மன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினர். நிகழ்ச்சிக்கு அனுமதி பெறவில்லை என்பதற்கும், பொதுமக்களுக்கு இடையூறு செய்ததற்கும்  காவல்துறை தரப்பில்  கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பதால் வழக்கிலிருந்து 7 பேரையும் விடுதலை செய்வதாக நீதித்துறை நடுவர் நாகப்பன் தீர்ப்பளித்தார்.
இதையடுத்து நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த சுதீஷ் உள்பட 7 பேருக்கும், கட்சியின் இதர நிர்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த வழக்கில் தேமுதிக தரப்பில் வழக்குரைஞர்கள் பென்னட்ராஜ், அகஸ்டின் ஆகியோர் வாதாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com