மாவட்டத்தில் 6 ஆண்டுகளில் ரூ.175 கோடி திருமண நிதியுதவி

திருச்சி மாவட்டத்தில் 2011- 17 வரையிலான 6 ஆண்டுகளில் சமூக நலத்துறை  சார்பில் ரூ.175 கோடி திருமண

திருச்சி மாவட்டத்தில் 2011- 17 வரையிலான 6 ஆண்டுகளில் சமூக நலத்துறை  சார்பில் ரூ.175 கோடி திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார்.
திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரிக் கலையரங்கில்  வெள்ளிக்கிழமை  சமூக நலத்துறையின் சார்பில் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவைத் தொடக்கி வைத்து மேலும் அவர் பேசியது: ஏழை கர்ப்பிணிகளுக்கு அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 16 ஒன்றியங்களைச் சேர்ந்த 2,160 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டுள்ளது. திருச்சியில் மட்டும் 400 பேருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டிருக்கிறது.
பெண்களுக்கு என்று எண்ணற்றத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.  2011-17 வரையிலான 6 ஆண்டுகளில் ரூ.175  கோடி திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் ரூ.18,000 வீதம் 11,575 கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.  மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, தொட்டியம் வட்டாரங்களில் குடும்பநலம் பற்றிய விழிப்புணர்வு குறைந்து காணப்படுகிறது என்றார் ஆட்சியர்.
தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற கர்ப்பிணிப் பெண்களுக்கு  ஐந்துவகை உணவுகள் வழங்கப்பட்டது. கர்ப்பிணிகளின் உடல் எடை எடுக்கப்பட்டு அதற்கேற்ற மருத்துவ ஆலோசனை, பிரசவகாலப் பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
விழாவில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து, நலுங்கு வைத்த பின்னர், பூ, மஞ்சள், குங்குமம், வளையல், டிபன்பாக்ஸ் மற்றும் ஜாக்கெட் துணி வழக்கப்பட்டது.  நிகழ்வில் மக்களவை உறுப்பினர் ப.குமார், மாவட்ட ஆட்சியரின் துணைவியார் பிரேமலதா ராசாமணி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேசுவரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மலர்விழி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் சம்சாத்பேகம், மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜி. அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மணப்பாறையில்... மணப்பாறையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றியங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிச் திட்டம் சார்பில் 379 அங்கன்வாடி மையங்களில் பயன்பெறும் 750க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா அந்தந்த ஒன்றியங்களில் உள்ள தனியார் மண்டபங்களில் நடைபெற்றது.
வெங்கடாசலபுரத்தில்... உப்பிலியபுரம் அருகே வெங்கடாசலபுரம் குழந்தைகள் ஊட்டச்சத்து மையத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு துறையூர் வட்டாட்சியர் பு.ரவிசங்கர் தலைமை வகித்தார். உப்பிலியபுரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, சமூக நல தனி வட்டாட்சியர் சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணிப் பெண்கள் 120 பேருக்கு வளையல் அணிவிக்கப்பட்டு மங்கலப் பொருள்கள் அடங்கிய அன்பளிப்பு பை வழங்கபபட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com