இளைஞர் மர்மச் சாவு வழக்கில் இருவர் கைது
By DIN | Published On : 01st April 2019 09:15 AM | Last Updated : 01st April 2019 09:15 AM | அ+அ அ- |

வையம்பட்டி அருகே இளைஞர் மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் இருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
வையம்பட்டி ஒன்றியம், ஆனங்கரைப்பட்டியில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த ந. பொன்னுச்சாமி (24), கடந்த 28 ஆம் தேதி ஊர் மந்தையில் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து வையம்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
அதே கிராமத்தைச் சேர்ந்த வெ. பழனிவேல் (21), தி. ராமன் (20) ஆகிய இருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்த போது, பொன்னுசாமியைத் தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. கடந்த புதன்கிழமை இரவு இவர்கள் இருவரும் பொன்னுச்சாமியுடன் இணைந்து மீசைக்காரன்குட்டு மலைப்பகுதியில் மது அருந்தியதும், அப்போது காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவரைத் தள்ளிவிட்டனர். இதில் பொன்னுச்சாமி உயிரிழந்ததால், அவரை மந்தையில் போட்டுச் சென்றதும் விசாரணையில் இருவரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போலீஸார் பழனிவேல், ராமனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.