திமுக கூட்டணி வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயம்
By DIN | Published On : 04th April 2019 08:46 AM | Last Updated : 04th April 2019 08:46 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயமாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
கரூர் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ஜோதிமணியை ஆதரித்து, மணப்பாறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
மக்களவைத் தேர்தல் திருப்பமான தேர்தலாகும். திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயம். காலம் அதற்கு இடம் கொடுக்கும். மோடி ஆட்சி மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
மோடி தனது கையில் இரண்டு ஆயுதங்களை வைத்துள்ளார். ஒன்று வருமானவரித் துறை, மற்றொன்று சி.பி.ஐ. இதனை வைத்துக் கொண்டு யாரை வேண்டுமானாலும் மிரட்டலாம் என நினைக்கிறார். தமிழகத்தில் கட்சிகளுக்கும், பா.ஜ.க.வுக்கும் போட்டி கிடையாது. நோட்டாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் தான் போட்டி என்றார் வீரமணி. கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.