வாகனக் கட்டணக் குளறுபடியில் திருத்தம்: விமான நிலையத்துக்குள் சென்று வரும் வாகனங்களுக்கான அனுமதி நேரம் அதிகரிப்பு
By DIN | Published On : 04th April 2019 08:55 AM | Last Updated : 04th April 2019 08:55 AM | அ+அ அ- |

திருச்சி விமான நிலையத்தில் வாகனங்கள் உள்ளே சென்று வர வழங்கப்பட்ட இலவச அனுமதிக்கான காலம் 3 நிமிஷங்களிலிருந்து 6 நிமிஷங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது புதன்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தனியார் ஒப்பந்தம் மூலம் வசூலிக்கப்பட்டு வந்த வாகன நிறுத்தக் கட்டணங்களை, விமான நிலைய ஆணையமே வசூலிக்கும் நடைமுறை திருச்சி விமான நிலையத்தில் ஏப்.1 முதல் அமல்படுத்தப்பட்டது.
புதிய கட்டணத்தை அறிமுகப்படுத்தியதோடு, பயணிகளை ஏற்றி அல்லது இறக்கி விடுவதற்கு விமான நிலையத்துக்குள் வந்து செல்லும் வாகனங்களுக்கு 3 நிமிஷம் வரை கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டது.
தனியார் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருந்த போது 5 நிமிஷங்கள் வரை வழங்கப்பட்ட அவகாசம் 3 நிமிஷங்களாக குறைக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்த நடைமுறைப்படுத்த ஏப்.1 ஆம் தேதி வாகன நிறுத்தக் கட்டணம் ரசீது வழங்கிய போது, சீட்டு அச்சடிக்கும் இயந்திரத்தில் ஏற்பட்டபழுது காரணமாக ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்ற நிலையில், அந்த வாகனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனால் வாகன ஓட்டுநர்களுக்கும் விமான நிலைய ஆணைய ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் ஆணையத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விமான நிலையத்துக்குள் சென்று வரும் வாகனங்களுக்கு 6 நிமிஷங்கள் வரை இலவசமாக அனுமதிப்பது, அதன் பின்னர் வரும் வாகனங்களுக்கு ரூ.300 அபராதம் விதிப்பது என முடிவு செய்து புதன்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விவரம் விமான நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளிலும் உள்ளது. மேலும் வழங்கப்படும் ரசீதிலும் குறிப்பிடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.