வாக்குச்சாவடிகளுக்கு பொருள்கள் அனுப்பும் பணி தொடக்கம்

மக்களவைத் தேர்தலையொட்டி, மாவட்டத்திலுள்ள 9 பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவுக்குத் தேவையான

மக்களவைத் தேர்தலையொட்டி, மாவட்டத்திலுள்ள 9 பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பல்வேறு பொருள்களைத் தொகுதி வாரியாகப் பிரித்து அனுப்பும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
வாக்குச்சாவடிகளில் தபால் வாக்குகளுக்கு பயன்படுத்தும் உறைகள், இதர காகித உறைகள், தேர்தல் ஆணையத்துக்கு வாக்குப் பதிவு விவரங்களைத் தெரிவிக்கும் படிவங்கள், வாக்குச்சாவடி விவரங்கள் கூடிய படிவங்கள் உள்ளிட்ட  பொருள்கள் தேர்தல் ஆணையத்தால் அனைத்துத் தொகுதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. 
 இதன்படி, 30 வகைப் பொருள்கள் அனைத்துத் தொகுதிகளுக்கும் வந்து சேர்ந்துள்ளன. லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்ட இவை, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை இறக்கப்பட்டு தொகுதி வாரியாக பிரித்து அடுக்கும் பணி நடைபெற்றது.
மணப்பாறை தொகுதிக்கு 324 வாக்குச்சாவடிகள், ஸ்ரீரங்கம் 341,  திருச்சி மேற்கு 271, திருச்சி கிழக்கு 258, திருவெறும்பூர் 294, லால்குடி 249, மண்ணச்சநல்லூர் 273, முசிறி 253, துறையூர் (தனி) 268 என மொத்தமுள்ள 2,533 வாக்குச் சாவடிகளுக்கு தேவையான அளவிலான பொருள்கள் மற்றும் கூடுதலாக 10 சதவீதம் என்ற  அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டன.
வாக்குச்சாவடித் தலைமை அலுவலருக்கானப் பயிற்சி கையேடு, வாக்குப்பதிவு இயந்திரம் கையாளும் பயிற்சி புத்தகம், அழியாத மை குப்பி, மெட்டல் சீல், வாக்கு அளிக்க ரப்பர் முத்திரை மற்றும் வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான பொருள்கள் அனைத்தும் அந்தந்த தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி எண்ணிக்கைகளுக்கு தகுந்தபடி பிரித்து அனுப்பும் பணியில் பல்வேறு துறை ஊழியர்கள் புதன்கிழமை ஈடுபட்டனர். பின்னர், இவை அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் வசம் ஒப்படைக்கும் வகையில் தனியே வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டன. இதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு, வாக்கு எண்ணும் பணிக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் தேர்தல் ஆணையத்திடமிருந்து வந்தவுடன், தொகுதி வாரியாகப் பிரித்து அனுப்பப்படும் என தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com