உறையூர் வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள்


திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் நிகழாண்டுக்கான சித்திரைத் தேர்த் திருவிழா கடந்த 6 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பூதம்,  கயிலாயம்,  காமதேனு, சிம்மம், யானை, அன்னம், குதிரை என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  ஒவ்வொரு நாளும் பிற்பகல் 12 மணிக்கு அம்மன் சிறப்பு அபிஷேக அர்ச்சனை நடைபெற்றது.
ஒன்பதாம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.  திருத்தேரில் அம்மன் எழுந்தருளிய பின்னர் தேர் வடம்பிடிக்கப்பட்டு, நான்குரத வீதிகளின் வழியாக வலம் வந்து நிலையை வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்று அம்மனைத் தரிசனம் செய்தனர்.  தொடர்ந்து மாலையில் அம்மன் சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தேரோட்டத்தையொட்டி பக்தர்கள் ஏராளமானோர் பால்குடங்கள் எடுத்தும், அக்னிச்சட்டி ஏந்தியும் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். பல்வேறு அமைப்புகள் சார்பில் நீர்மோர், பானகம், அன்னதானம் வழங்கப்பட்டது. பத்தாம் திருநாளான திங்கள்கிழமை  முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா வருதலும், செவ்வாய்க்கிழமை காப்புக் கலைதல் மற்றும் விடையாற்றியும் நடைபெறுகிறது. 
தேரோட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ப.ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் சு. ஞானசேகரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு:  விகாரி ஆண்டு பிறப்பையொட்டி,  உறையூர் வெக்காளியம்மன், திருவானைக்கா அகிலாண்டேசுவரி அம்மன், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி, உறையூர் நாச்சியார் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com