சமூக வலைதளங்களில் அவதூறு:  போலீஸில் அய்யாக்கண்ணு புகார்

சமூக வலைதளங்களில்  தன்மீது அவதூறு தகவல்களை  பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், குறிப்பிட்ட சமூக வலைதளங்களை


சமூக வலைதளங்களில்  தன்மீது அவதூறு தகவல்களை  பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், குறிப்பிட்ட சமூக வலைதளங்களை முடக்கவேண்டும் என்று  தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பொ.அய்யாக்கண்ணு புகார் அளித்துள்ளார்.
திருச்சி மாநகரக் காவல் ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பது:
விவசாயிகள் பிரச்னை தொடர்பாக தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம்.  புதுதில்லியில் போராட்டம் நடத்தியபோது,  திமுக  தலைவர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடத்துவதாக சமூக வலைதளங்களில் சிலர் அவதூறு பரப்பினர். இதற்கிடையே மக்களவைத் தேர்தல் வந்ததால், எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத மோடி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக போட்டியிடுவதாக அறிவித்தோம். இது தொடர்பாக தீர்மானங்களை நிறைவேற்றி காங்கிரஸ், பாஜக அலுவலகங்களுக்கு  அனுப்பினோம். 
 ஆட்சிக்கு வந்தால் விவசாயக்  கடன்களைத் தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் கட்சியினர் கூறினர். பாஜக  எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து,  எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அறிவித்தது. இதனையடுத்து, எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும், வெற்றி பெற்ற பின்னர் யாராக இருந்தாலும் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளோம். 
இந்நிலையில், பாஜக சார்பில், அமித்ஷாவிடமிருந்து நாங்கள் பணம் வாங்கியதாக சமூக வலை தளங்களில்  சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.  எங்கள் சங்கம் குறித்தும், என்னைப் பற்றியும் தவறான வார்த்தைகளால் பதிவிட்டு வருகின்றனர். மேலும் திமுக- காங்கிரஸ் தூண்டுதலின் பேரில் நாங்கள் போராட்டம் நடத்தியதாகவும் பரப்புகின்றனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அவதூறு கருத்துக்களை  பரப்பும் சமூக வலை தளங்களை முடக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com