பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்கள் இறுதிக் கட்ட பிரசாரம்

பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டி.ஆர். பாரிவேந்தர் காட்டுப்புத்தூரிலும், அதிமுக வேட்பாளர்


பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டி.ஆர். பாரிவேந்தர் காட்டுப்புத்தூரிலும், அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி முசிறியிலும் தங்கள் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.
பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டி.ஆர்.பாரிவேந்தர், செவ்வாய்க்கிழமை துறையூர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது:  தமிழகத்தில் மட்டுமல்ல, மத்தியிலும் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படஉள்ளது. மக்கள் வாழ்வை வளப்படுத்துகின்ற  வாக்குறுதிகளை காங்கிரஸ்-திமுக கூட்டணி அறிவித்துள்ளது.
 தேர்தலில் வெற்றிப் பெற்ற பிறகு ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களைச் சந்தித்து பிரச்னைகளைக் கேட்டறிந்து, அவைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
தொடர்ந்து, காட்டுப்புத்தூரில் செவ்வாய்க்கிழமை மாலை இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்ட பாரிவேந்தர், தொட்டியம் பகுதிகளில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும். ஏரி, குளம் குட்டைகளைத் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்என்று பேசி, பிரசாரத்தை நிறைவு செய்தார்.
இப்பிரசாரத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலர் காடுவெட்டி ந.தியாகராஜன், சட்டப்பேரவை உறுப்பினர் செ. ஸ்டாலின்குமார், நகரச் செயலர் முரளி, ஒன்றியச் செயலர் அண்ணாத்துரை, மாவட்டப் பொருளாளர் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிமுக  :   பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி முசிறி கைகாட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
முசிறி புதிய பேருந்து நிலையப் பகுதியில் தொடங்கிய இறுதிக்கட்ட பிரசாரம் திருச்சி - நாமக்கல் புறவழிசாலை, உழவர் சந்தை, துறையூர் சாலை  வழியாக கைகாட்டி பகுதியில் நிறைவடைந்தது. அங்கு பொதுமக்கள் மத்தியில் என்.ஆர்.சிவபதி பேசியது:
2011 பேரவைத் தேர்தலின் போது சமயபுரம் டோல்கேட் முதல் நாமக்கல் வரை நான்குவழிச்சாலை அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தேன். அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
 காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில் பல நல்ல திட்டங்களை வகுத்து, அதை செயல்படுத்த பாடுபடுவேன் என்றார்.
பிரசாரத்தின் போது, புறநகர் மாவட்ட அதிமுக செயலர் டி.ரத்தினவேல்,  சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராசு,  முன்னாள் அமைச்சர் பூனாட்சி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பிரின்ஸ் தங்கவேல் உள்ளிட்டோர்  உடன் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com