சுடச்சுட

  


  திருச்சி மண்டலத்தில் கடந்த ஆண்டுகளைப் போலவே 2019-20 கல்வியாண்டிலும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  கடந்தாண்டை போன்று மருத்துவம், பொறியியல் பாடங்களை விஞ்சிடும் வகையில் கலை, அறிவியல் படிப்புகளின் மீது மாணவர்களின் கவனம் திரும்பியுள்ளது. வழக்கம்போல வணிகவியல் படிப்புக்கே அதிகமான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு அடுத்தப்படியாக அடிப்படை அறிவியல் படிப்புகளுக்கு அதிக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூரைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.
  கலை மற்றும் அறிவியல் படிப்புகளை பொறுத்தவரை ஆங்கில இலக்கியம், பி.காம்., கணிதம், வணிகவியல், பிபிஏ, பிசிஏ, புவியியல், உணவு அறிவியல், ஹோட்டல் மேலாண்மை, ஆடை வடிவமைப்பு, சுற்றுலா மேலாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது என்கின்றனர் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகத்தினர்.
  இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
  அதிக மதிப்பெண் பெறும் சிறந்த மாணவர்களை கவரும் வகையில் அரசு கல்லூரிகளிலும் முன்கூட்டியே விண்ணப்பங்கள் விநியோகமும், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வும் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான அரசு கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகமும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் கால அவகாசமும் மே மாத இறுதி வரை அளிக்கப்பட்டுள்ளது.
  இப்போதைய நிலவரப்படி, கலை அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டுகளைப் போலவே அதிகமாக விநியோகமாகியிருப்பது தெரியவந்துள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர், வேப்பூர், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, திருச்சி மாவட்டம் லால்குடி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், நவலூர்குட்டப்பட்டு, நன்னிலம், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் 10 பல்கலைக்கழக கல்லூரிகள் உள்ளன. இவைத்தவிர பல்கலைக் கழக நிர்வாகத்தின் கீழ் 21 அரசு கல்லூரிகள், 19 உதவி பெறும் கல்லூரிகள், 82 சுயநிதி கல்லூரிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் என 146 கல்லூரிகள் உள்ளன.
  இந்த கல்லூரிகள் அனைத்திலும் கலை, அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை அதிக எண்ணிக்கையில் விநியோகிக்கப்பட்டுள்ளன. 800 இடங்களைக் கொண்ட கல்லூரியில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன. இதில் பி.காம். படிப்புக்கு மட்டும் 3000 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். இதே எண்ணிக்கையிலேயே அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
  இது கடந்த ஆண்டுகளை விட அதிகம் எனவும், குறிப்பாக பி.காம்., பி.எஸ்சி. கணிதம் மற்றும் அடிப்படை அறிவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு அதிக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai