சுடச்சுட

  

  திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் செலவு கணக்கு தாக்கல்: தேமுதிக ரூ.35 லட்சம் ;காங்கிரஸ் ரூ.24 லட்சம்; அமமுக ரூ.19 லட்சம்

  By DIN  |   Published on : 21st April 2019 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இதுவரை தாக்கல் செய்துள்ள செலவு கணக்கு விவரங்கள் வெளியாகியுள்ளன.
  திருச்சி மக்களவைத் தொகுதியில்  காங்கிரஸ் கட்சியின் சார்பில் சு. திருநாவுக்கரசர், தேமுதிக சார்பில் வி. இளங்கோவன், அமமுக சார்பில் சாருபாலா ஆர். தொண்டைமான், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வி. ஆனந்தராஜா, நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி. வினோத் மற்றும் பல்வேறு கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 24 பேர் போட்டியிட்டனர்.
  இதில்,  2 சுயேச்சைகள் தவிர்த்து இதர 22 வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்கை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தாக்கல் செய்துள்ளனர்.
  தேமுதிக, காங்கிரஸ் வேட்பாளர்கள் தலா ஒரு முறையும், அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட இதர வேட்பாளர்கள் தலா 2 முறையும் செலவு கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
  அதன்படி, தேமுதிக வேட்பாளர் வி. இளங்கோவன் பல்வேறு நிலைகளில் ரூ.35 லட்சத்து 90 ஆயிரம் செலவு செய்திருப்பதாகவும், காங்கிரஸ் வேட்பாளர் சு. திருநாவுக்கரசர் ரூ.24 லட்சத்து 17 ஆயிரத்து 104 செலவிட்டிருப்பதாகவும், அமமுக வேட்பாளர் சாருபாலா ஆர். தொண்டைமான் ரூ.19 லட்சத்து 69 ஆயிரத்து 317 செலவிட்டிருப்பதாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வி. ஆனந்தராஜா ரூ. 4 லட்சத்து 3 ஆயிரத்து 800, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வி. வினோத் ரூ.4 லட்சத்து 312 செலவு செய்திருப்பதாகவும் கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
  திருச்சி தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளர்களாக தேர்தல் ஆணையத்தால் அனுப் குமார் வெர்மா, சுதன்சு. எஸ். கௌதம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு தேர்தல் செலவின நடவடிக்கைகள் விடியோ, புகைப்படம் மூலம் பதிவு செய்யப்பட்டது. மேலும், வேட்பாளர்கள் தாக்கல் செய்த செலவு கணக்குகளையும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சு. சிவராசு முன்னிலையில், சரிபார்த்து கையொப்பமிட்டுள்ளனர். இதில், முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் தாக்கல் செய்த கணக்கு விவரங்கள் தினந்தோறும் என்ற அடிப்படையில் பட்டியலிடப்படாமலும், முறையான ஆவணங்கள் இணைக்கப்படாமலிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். எனவே, அடுத்த ஆய்வுக்குள்படுத்தும்போது அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
  வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு மேலும் 30 நாள்களுக்குள் கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது. அதற்குள் வேட்பாளர்கள் தங்களது செலவு விவரங்களை முழுமையாக தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்படுவர். தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai