சுடச்சுட

  


  திருச்சி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் மாநகரில் பல்வேறு இடங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், போர்க்கால அடிப்படையில் பழுதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றதால் சனிக்கிழமை மாலையே குடிநீர் மோட்டார் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீரேற்ற நிலையத்தின் பிரதான நீர் உந்து குழாயில் வெள்ளிக்கிழமை திடீரென உடைப்பு ஏற்பட்டது. மேலும் தண்ணீர் கசிந்து அளவுக்கு அதிகமாக வெளியேறத் தொடங்கியது. இதையடுத்து இந்த நீரேற்ற நிலையத்திலிருந்து குடிநீர் விநியோகிக்கும் பணி உடனடியாக நிறுத்தப்பட்டது.
  இதன் காரணமாக மரக்கடை, விறகுபேட்டை, மலைக்கோட்டை, சிந்தாமணி, பெரியார் நகர், தில்லைநகர், அண்ணா நகர், புத்தூர், காஜாபேட்டை, கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர், ஆல்பா நகர், பாத்திமாநகர், கருமண்டபம், காஜாமலை காலனி ஆகிய பகுதிகளில் வெள்ளி, சனிக்கிழமைகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. மேலும், பிராட்டியூர் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் கீழ் வரும் ராம்ஜிநகர், பிராட்டியூர், எடமலைப்பட்டி புதூர், விஸ்வாஸ்நகர், ஜெயா நகர், பிராட்டியூர் காவேரிநகர் ஆகிய பகுதிகளிலும் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
  இருப்பினும், ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் நீர் கசிவு ஏற்பட்ட பகுதிகளில் பெரிய அளிவில் பள்ளம் தோண்டப்பட்டு குழாயில் ஏற்பட்ட உடைப்பு வெள்ளிக்கிழமை மாலை கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரவு, பகலாக பணிகளை முடுக்கிவிட்டு சனிக்கிழமை பிற்பகல் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டன.
  இதையடுத்து குடிநீர் மோட்டார்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
  இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் கூறுகையில், குழாய் உடைப்பு காரணமாக இரண்டு நாள்களுக்கு குடிநீர் விநியோக்க முடியவில்லை. ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல குடிநீர் விநியோகிக்கப்படும் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai