சுடச்சுட

  

  பக்குவமில்லாத ஆழ்மனதின் விளையாட்டுக்களால் பலரும் அவதிப்படுவதால் ஆழ்மன விழிப்புணர்வு மனிதர்களுக்கு மிகவும் அவசியம் என சொற்பொழிவாளர் சுகி.சிவம் தெரிவித்தார்.
  திருச்சி நகைச்சுவை மன்றமும்,சோழ மண்டலத் தமிழிலக்கிய கூட்டமைப்பும் இணைந்து நலம், நலமறிய  என்ற தலைப்பில் மருத்துவ, வாழ்வியல் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தினர். 
  இதன்நிறைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்,  கலந்து கொண்டு சொற்பொழிவாளர் சுகி.சிவம் பேசியது: மனிதர்களுக்கு எந்த நோய்களும் இல்லாமல் நலமாக இருந்தாலும் நோய் இருப்பது போன்ற எண்ணமே ஆழ்மனதின் விளையாட்டு. 
  மனம் ஒன்றில் வசியமாகி விட்டால் அதிலிருந்து மீளாது, பிடிக்காததையும் செய்யச் சொல்லும்,எந்தச் செயலையும் அறிவுப்பூர்வமாக அணுக முடியாது. எனவே ஆழ்மன விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே வாழ்க்கை சிறப்பானதாக அமையும். 
  எண்ணங்களை ஒருமுகப்படுத்தினால் சந்தோஷமாக வாழ முடியும். ஆழ்மனதின் தூக்கத்திலிருந்து விடுதலை பெற்று விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே பிரச்னைகளிலிருந்து விடுபட முடியும் என்றார்.
  முன்னதாக, விழாவுக்கு சோழமண்டலத் தமிழிலக்கிய கூட்டமைப்பின் தலைவர் ஜெ.கனகராஜன் தலைமை வகித்தார். விக்னேஷ் கல்விக் குழுமங்களின் தலைவர் வி.கோபிநாதன், மெ.ராமநாதன், ஷிவ்மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகைச்சுவை மன்ற செயலாளர் க.சிவகுருநாதன் வரவேற்று பேசினார். துரை.வீரசக்தி நன்றி கூறினார்.
  விழாவில் மூளை நரம்பியல் மருத்துவர் ஏ.வேணி, இதய நோய் மருத்துவர் செந்தில்குமார் நல்லுசாமி, இயற்கை மருத்துவர் பிரீத்தி புஷ்கரிணி, அரசு மருத்துவர் சித்ரா திருவள்ளுவன்  உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai