சுடச்சுட

  

  இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி: சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு?

  By DIN  |   Published on : 23rd April 2019 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களால் சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக, சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச் சம்பவம் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளநிலையில் கொழும்பு விமானநிலையப் பகுதியில் திங்கள்கிழமை குழாய் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமான நிலையத்திலும் குண்டு வெடித்திருந்தால் உயிரிழப்பு அதிகமாகியிருக்கும் என்பதுடன் உலக நாடுகளுடனான விமானப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருக்கும். இந்நிலையில்  அவசரகால நிலையை (எமர்ஜென்சி) இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவங்களால், இலங்கைக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உலக நாடுகள் பெரும்பாலானவற்றிலிருந்து இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு விமானப் போக்குவரத்து உள்ளது. இந்தியாவிலும் பல்வேறு நகரங்களிலிருந்தும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில்,  திருச்சியிலிருந்து கொழும்புவுக்கு  தினமும் காலை மற்றும் மாலை என இரு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  இந்த விமானங்களில் திங்கள்கிழமை காலை சென்ற விமானத்தில் 152 பேரும், மாலை சென்ற விமானத்தில் 155 பேரும் பயணித்தனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த நிலையிலும் பயணிகள் யாரும் தங்களது பயணத்தை ரத்து செய்யவில்லை. 
  இந்நிலையில்,  அவசரகால நிலை அமலுக்கு வந்துவிட்டால், சுற்றுலா பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்யும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் டிராவல்ஸ் முகவர்கள் தெரிவிக்கின்றனர். 
  இது குறித்து திருச்சி மாவட்ட டிராவல்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் கூறுகையில், திருச்சி-இலங்கை இடையே இரு விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையிலும், அவற்றில் அதிகளவில் பயணிகள் வருகையும் புறப்பாடும் உள்ளது.  பொதுவாக, ஏப்ரல், மே, மாதங்களில்தான் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.  அந்த வகையில் ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதுவரையில் யாரும் பதிவை ரத்து செய்யவில்லை. ஆனால், அவசரகால நிலை அமல்படுத்தப்பட்டால்  சுற்றுலா செல்வோர் தங்கள் பயணங்களை ரத்து செய்யும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர். 
  சரக்குப் போக்குவரத்து :  திருச்சியிலிருந்து இலங்கைக்கு தினமும், 5 டன் சரக்குகள் ஏற்றுமதியாகின்றன. காய்கனிகள், மலர்கள், துணிகள் மற்றும் உணவுப் பொருள்கள் இதில் அடங்கும். பயணிகள் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் அதிகளவில் சரக்குகள் ஏற்றி அனுப்ப வாய்ப்புள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai