கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

திருச்சி மாநகரில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியிருப்பதால் திங்கள்கிழமை

திருச்சி மாநகரில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியிருப்பதால் திங்கள்கிழமை பெரும்பாலான கல்லூரிகளில் மாணவ, மாணவிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. இதில், பல கல்லூரிகள் இணையத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்திருந்தன. 
இந்நிலையில், திருச்சியில் உள்ள ஜமால்முகமது கல்லூரி, தூய வளனார் கல்லூரி, தேசியக் கல்லூரி உள்ளிட்ட பெரும்பாலான கல்லூரிகளில் திங்கள்கிழமை மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதேபோல் ஈவெரா அரசுக் கல்லூரியில் விண்ணப்பங்கள் வாங்குவதற்காக ஏராளமான மாணவ, மாணவிகள் திரண்டிருந்தனர்.
இதில், சில கல்லூரிகளில்  ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியாக கல்வி ஆலோசனைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். சில கல்லூரிகளில்  பட்டப்படிப்புடன் ஒருங்கிணைந்த படிப்பாக போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும்  நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஒரு சில கல்லூரிகளின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த நன்கொடை பெறுவதில்லை என்று அறிவிப்பு  பெற்றோர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 
பல கல்லூரிகளில் மே மாதத்துக்குள் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான காலஅவகாசம் நிறைவு பெறுவதால் ஏராளமான மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை பெறுவதற்கும், கல்லூரிகளில் சேர்க்கைக்கும் குவியத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து ஒரு மாணவியின் பெற்றோர் கூறியது:  இணையத்தில் விண்ணப்பிக்குமாறு பல கல்லூரிகள் தெரிவித்துள்ளன. ஆனால்,  எங்களைப் போன்ற படிக்காதவர்கள் எப்படி விண்ணப்பிப்பது என்று தெரியவில்லை. இதற்காக தனியார் பிரவுசிங் சென்டர்கள் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். 
மேலும், விண்ணப்பத்துடன் கல்லூரிகளுக்கு நேரில் சென்று கல்விக்கட்டணத்தை செலுத்தும் போது பல கல்லூரிகளில் நன்கொடை, கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம் ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் செலுத்தினால் மட்டுமே மாணவரை சேர்த்துக் கொள்ள முடியும் என்பது கவலையளிப்பதாக இருக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com