ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேர்த் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு திங்கள்கிழமை காலை

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு திங்கள்கிழமை காலை தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. திருத்தேரோட்டம் மே 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரை மாதத்தில் நடைபெறும் தேரோட்டம் வெகு விமரிசையானது. நிகழாண்டில் இந்த விழாவிற்காக கிழக்கு சித்திரை வீதியில் உள்ள தேரில் திங்கள்கிழமை காலை 9.45 மணிக்கு மிதுன லக்னத்தில் முகூர்த்தக் கால் நடப்பட்டது. முன்னதாக முகூர்த்தக் காலுக்கு வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் தெளிக்கப்பட்டு சந்தனம் பூசி மாவிலை கட்டப்பட்டு கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் அறங்காவலர்கள் ஆகியோர் தேரில் முகூர்த்தக்காலை நட்டனர். அப்போது கோயில் யானை ஆண்டாள் ஆசி வழங்கியது. 
மேலும் ஏப். 25 ஆம் தேதி கோயிலில் உள்ள தங்கக் கொடிமரத்தில்  காலை 4.30 மணி முதல் 5.15 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து 26 ஆம் தேதி மாலை கற்பக விருட்சத்திலும், 27 ஆம் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 4 ஆம் திருநாளான 28 ஆம் தேதி காலை இரட்டை பிரபையிலும், மாலை கருட வாகனத்திலும், 5 ஆம் திருநாளான 29 ஆம் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 6 ஆம் திருநாளான 30 ஆம் தேதி காலை தங்கஹம்ச வாகனத்திலும், மாலை யானை 
வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றார். 
7 ஆம் திருநாளான மே மாதம் 1 ஆம் தேதி நெல்லளவு கண்டருளுதலும், 8 ஆம் திருநாளான 2 ஆம் தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்கக் குதிரை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி வையாளி கண்டருளுகிறார். 
முக்கிய நிகழ்வான 9 ஆம் நாளான 3 ஆம் தேதி காலை சித்திரை தேரோட்டம் நடைபெறவுள்ளது. 10 ஆம் திருநாளான 4 ஆம் தேதி சப்தாவரணமும், 11 ஆம் திருநாளான 5 ஆம் தேதி ஆளும் பல்லக்குடன் விழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com