உலக புத்தக தின கண்காட்சி தொடக்கம்

உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் புத்தகக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.


உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் புத்தகக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
திருச்சி மாவட்ட மைய நூலகமும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினத்தை முன்னிட்டு புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
திருச்சி மேலரண்சாலையில் உள்ள மைய நூலக வளாகத்தின் கீழ் தளத்தில் நடைபெறும் கண்காட்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், கௌரா பதிப்பகத்தின் வெளியீடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், எளிய முறையில் ஆங்கில பயிற்சி, நன்னெறி கதைகள், சிறுவர்களுக்கான கதைகள், ஓவிய பயிற்சி, எழுத்துப் பயிற்சி, விருதுகள் பெற்ற புத்தகங்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான வழிகாட்டி புத்தகங்கள், சமையல் குறிப்புகள், தமிழ் இலக்கணம், ஆங்கில இலக்கணம் என ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. ஏப். 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கண்காட்சியை தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். இக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களுக்கு 25 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படும் என நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவன திருச்சி பிரிவு மேலாளர் முரளி தெரிவித்தார்.
லால்குடி, துறையூரில்...
லால்குடி/ துறையூர், ஏப். 23: திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள குமுளூர் பகுதியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை அறிவியல் கல்லூரியில் உலக புத்தக தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.  
விழாவுக்கு  கல்லூரி முதல்வர்  முனைவர் ரா.சுவாமிநாதன் தலைமை வகித்தார்.  கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவர்  பேராசிரியர்  சி. கார்த்திக் சிறப்புரையாற்றினார். பேராசிரியை த. அங்கயர்கண்ணி வரவேற்றார். பேராசிரியர்  எஸ். பரமேஸ்வரன்  நன்றி கூறினார். விழாவில் கவிஞர் சே. இளமதி,  பேராசிரியைகள் பானுமதி,  அனிதா, சங்கீதா, சிவகாமி,  நிஷா ஜெயசீலி உள்ளிட்ட  பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துறையூர்: துரையூர் அருகே உள்ள கீரம்பூர் கிளை நூலகத்தில் நூலகர் ச.நூர்அகமது தேசத் தலைவர்கள், மகளிர் மற்றும் சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நூல்களைத் தேர்வு செய்து புத்தகக் கண்காட்சி அமைத்திருந்தார். வாசிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் தி. நடராஜன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் வே. நவேந்திரன், வட்டாட்சியர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com