பண மோசடி :தனியார் அறக்கட்டளை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருச்சியில், ரூ. 32 லட்சம் மோசடி செய்ததுடன், தேச விரோத செயல்களில் ஈடுபட வலியுறுத்தியதாக, தனியார் அறக்கட்டளை நிர்வாகி மீது


திருச்சியில், ரூ. 32 லட்சம் மோசடி செய்ததுடன், தேச விரோத செயல்களில் ஈடுபட வலியுறுத்தியதாக, தனியார் அறக்கட்டளை நிர்வாகி மீது தேசிய மக்கள் பேரியக்க நிறுவனர் ஆர். செல்வராஜ், மாநகர காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் தலைமை அலுவலகத்தை அமைத்து, தேசிய மக்கள் பேரியக்கம் என்ற சமூக அமைப்பை நடத்தி வருகிறேன். இந்நிலையில் திருச்சி கே.கே. நகர் அருகேயுள்ள குறிஞ்சிநகர், சத்யசாயி தெருவில் அனுபூதி சமாஜம் என்ற பெயரில் ஆன்மிக அமைப்பை நடத்தி வரும் சு. நந்திஷா என்ற நந்தகுமார், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு,  எம்.ஆர்.ஐ. என்ற பெயரில் அறக்கட்டனை நிறுவி சமூக சேவைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்காக ரூ. 5 லட்சம்,  காரையும் தரவேண்டும் எனவும் கூறினார்.
அதன்படி பிப்ரவரி 4 ஆம் தேதி ரூ. 5 லட்சம் மற்றும் காரை கொடுத்தேன்.  இதையடுத்து பிப்ரவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில், வயலூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 32 மாவட்டங்களிலிருந்தும் தலா ஒருவர் வீதம் 32 பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டனர். 
அதற்காக பிரதிநிதிகளிடமிருந்து தலா ரூ. 1 லட்சம் பெறப்பட்டது.  பின்னர் அவர்களுக்கு மாதம் ரூ. 1 லட்சம் சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. கூட்டத்தின்போது, நாடு முழுவதுமிருந்து ரூ. 900 கோடி  எம்ஆர்ஐ அறக்கட்டளைக்கு வந்துள்ளதாகவும்,  சமூக நலன்களுக்காகவும் கோயில்கள் அமைக்க பயன்படுத்தவுள்ளதாக நந்தகுமார் தெரிவித்தார்.
இதேபோல்,  பல்வேறு பகுதிகளில் கூட்டம் நடத்தினார். ஒவ்வொரு கூட்டத்திலும் 1,200 பேர் வீதம் மொத்தம் 7,200 பேருக்கு எம்ஆர்ஐ அறக்கட்டளையில் பணி நியமனம் செய்யப்பட்டு அதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது. அவர்களுக்கு மாதம் ரூ. 15,000 சம்பளம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 4 ஆம் தேதி மீண்டும் என்னை அழைத்த நந்தகுமார்,  அனைத்துப் பணியாளர்களையும் திருச்சி அனுபூதி சமாஜத்துக்கு வருமாறும், அனைவரும் தங்ளது வாக்காளர் அடையாள அட்டையை எரித்து, வாக்குகளை துறந்து, இதுகுறித்த அறிவிப்பை பதிவு செய்து, தில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார். 
இது குறித்து கட்செவி அஞ்சல் (வாட்சப்), யூ டியூப் மூலமும் குறுந்தகவல்கள் தெரிவித்துள்ளார். இதுபோல செய்தால் மட்டுமே அனைவருக்கும் சம்பளமும், திட்ட நிதியும் வழங்கப்படும் எனக்கூறி மிரட்டினார்.  இதையடுத்து ஏப்ரல் 15 ஆம் தேதி சென்று, நான் கொடுத்த ரூ. 5 லட்சம் மற்றும் எனது காரையும் கேட்டேன். 
இளைஞர்களிடம் பெற்ற ரூ. 32 லட்சத்தையும் வழங்குமாறு கூறினேன், ஆனால் அவர் தர மறுத்து மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து நான் அவரது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த எனது காரை மட்டும் எடுத்துகொண்டு வந்துவிட்டேன். இது குறித்து நடவடிக்கை எடுத்து, எனது பணம் ரூ. 5 லட்சம் மற்றும் இளைஞர்களிடம் இருந்து பெற்ற ரூ. 32 லட்சத்தையும் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com