சுடச்சுட

  


  துறையூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது. 
  மண்ணச்சநல்லூர் நமசிவாயம் நகரைச் சேர்ந்தவர் ராஜூ மகன் சந்திரசேகரன்(32). லாரி ஓட்டுநர். இவர் புதன்கிழமை இரவு  கரட்டாம்பட்டி எல்லையில் புலிவலம் வனப்பகுதிக்கு முன்பாக லாரியை நிறுத்தினார். அப்போது இரண்டு பைக்குகளில் வந்த 7 பேர் சந்திரசேகரை கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ. 2, 500-ஐ பறித்தனர். அச்சமயம், புதன்கிழமை பட்டப்பகலில் கரட்டாம்பட்டியில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தைத் தொடர்ந்து திருடர்களைத் தேடி அவ்வழியே வந்து கொண்டிருந்த கிராமத்தினரைக் கண்ட 7 பேரும் இரண்டு இருசக்கர வாகனங்களில் தப்பியோடினர். லாரி ஓட்டுநரிடம் நடைபெற்ற வழிப்பறியை அறிந்த கிராமத்தினர் அவர்களை வாகனங்களில் விரட்டினர். இதில், 4 பேர் ஒரு வாகனத்தில்  தப்பினர். மற்ற 3 பேர் சென்ற வாகனம் பகளவாடி அருகே தடுமாறி கீழே விழுந்ததில், அதிலிருந்த ஒருவர் தப்பினார். மற்ற இருவரையும் கிராமத்தினர் மடக்கிப் பிடித்தனர். 
  விசாரணையில், அவர்கள் கண்ணனூர்பாளையம் புண்ணியமூர்த்தி மகன் சிவகுரு(21), கண்ணனூர் சரவணன் மகன் பிரவீன்(20) என்பது தெரிந்தது. கிராமத்தினர் அவர்கள் இருவரையும் புலிவலம் போலீஸில் ஒப்படைத்தனர். 
  லாரி ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் புலிவலம் போலீஸார் தப்பியோடிய கண்ணணூரைச் சேர்ந்த பொன்ராமன் மகன் கருணாகரன்(21), அதே ஊரைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் மகன் ராஜதுரை(21), சுப்பிரமணி மகன் மதிவாணன்(16), மாரிமுத்து மகன் ஜெயராமன்(17), சிவகுமார் மகன் மணிகண்டன்(19) ஆகிய 5 பேரையும் வியாழக்கிழமை இரவு மடக்கிப் பிடித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai