சுடச்சுட

  

  மாற்றுத்திறனாளி பெண் கொலை வழக்கில்  காதலன் உள்பட மூவருக்கு ஆயுள் தண்டனை

  By DIN  |   Published on : 26th April 2019 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  திருச்சியில் மாற்றுத்திறனாளி பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலன் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
  புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள சுதந்திரபட்டியைச் சேர்ந்தவர் சசிகலா (28). மாற்றுத்திறனாளி.  இவர், திருச்சி, மரக்கடை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் பெருமாள் மனைவி சந்தியா என்கிற சோபனா  வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, எதிர்வீட்டிலிருந்த தொழிலாளி சரவணன் என்பவருடன் பழக்கம்  ஏற்பட்டு இருவரும் காதலித்துள்ளனர்.  சசிகலா அடிக்கடி சரவணனுக்கு பணம் கொடுத்துள்ளார். இதையடுத்து ஒரு கட்டத்தில், சசிகலா திருமணம் செய்ய வலியுறுத்தியுள்ளார். ஆனால்,  சரவணன் தட்டிக் கழித்து வந்துள்ளார். 
  இந்நிலையில், சந்தியாவுக்கும் சரவணனுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சசிகலா திருமண விஷயம் குறித்து சந்தியாவிடம் கூறி சரவணன் ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது, திருமணம் செய்யாமல்,  சசிகலாவை கொலை செய்து அவரது நகைகளை அபகரிக்க  திட்டம் தீட்டியுள்ளனர். 
  அதன்படி கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி, சசிகலாவை திருச்சி வரவழைத்து, தென்னூர் பகுதியில் முள்புதர்கள் அடங்கிய ஒரு குட்டை (குளம்) இருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர்,  திட்டமிட்டபடி அங்கு ஏற்கெனவே காத்திருந்த சரவணனின் நண்பர் கோலி சுரேஷ்  உள்பட மூவரும் சேர்ந்து சசிகலாவை குட்டையில் மூழ்கடித்தும் கழுத்தை இறுக்கியும் கொலை செய்துள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த  நகைகளையும் ரொக்கத்தையும் மூவரும் எடுத்துக்கொண்டனர்.  தொடர்ந்து போலீஸில் சிக்காமல் இருப்பதற்காக, இறந்துபோன சசிகலாவின் தலையை துண்டித்து உடலை குட்டையில் வீசி விட்டு சென்று விட்டனர். தலையை துணியில் சுற்றி வேறு இடத்தில் வீசிவிட்டனர்.
  அடுத்த இரு தினங்களில் குட்டையில் தலையின்றி மிதந்த சசிகலாவின் உடலை கைப்பற்றி, அப்போதைய ஆய்வாளர் கபிலன்  தலைமையிலான தில்லைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். 
  இரு ஆண்டுகள் கழித்து, 2015-இல் இந்த வழக்கில் துப்பு கிடைத்ததையடுத்து சரவணன்,  கோலி சுரேஷ், சந்தியா ஆகியோரை கைது செய்து, திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன்,  சசிகலாவை கொலை செய்த குற்றத்துக்காக மூவருக்கும் ஆயுள் தண்டனையும்,  தலையை துண்டித்த குற்றத்துக்காக சரவணன், சுரேஷ் இருவருக்கும் மேலும் ஒரு ஆயுள் தண்டனையும், நகையை பறித்த குற்றத்துக்காக தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் (அனைத்து தண்டனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்) , மூவருக்கும் தலா ரூ.3,000 அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
  இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்குரைஞராக ஜெரால்டு ஜோசப் மதுரம் ஆஜராகினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai