மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஏப்.29-இல் கஞ்சித்தொட்டி திறப்பு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஏப்.29ஆம் தேதி கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட மாட்டு வண்டித் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.


திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஏப்.29ஆம் தேதி கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட மாட்டு வண்டித் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற திருச்சி மாவட்ட மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமர் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் ராஜா, சிஐடியூ மாவட்டச் செயலர் பன்னீர்செல்வம், மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலர் சேகர் மற்றும் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இக் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள் குறித்து சங்கத் தலைவர் ராமர் கூறியது:
திருச்சி மாவட்டத்தில் மணல் மாட்டு வண்டித் தொழிலை நம்பி 3 ஆயிரம் குடும்பங்களும், 3 ஆயிரம் மாடுகளும் உள்ளன. காவிரி, கொள்ளிடத்தில் பொதுப்பணித்துறையால் அமைக்கப்படும் மணல் குவாரிகள் அவ்வப்போது மூடப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. 
திருச்சி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வரை மணல் அள்ளப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி இறுதியிலேயே மாட்டு வண்டிகளுக்கு பணி வழங்கவில்லை. இதனைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியதால் பொதுப்பணித்துறையினருக்கும் தொழிலாளர் தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு ஏப்.8ஆம் தேதி முதல் மணல் அள்ள அனுமதிப்பதாக கூறினர். ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டதை காரணமாகக் கூறி ஏப்.8ஆம் தேதியும் குவாரிகளை திறக்கவோ, மாட்டு வண்டிகளுக்கு பணி வழங்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து பொதுப்பணித்துறை அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினோம். ஏப்.18ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த பிறகு காவிரியிலும், கொள்ளிடத்திலும் தலா ஒரு குவாரிகளை திறந்து மாட்டு வண்டிகளுக்கு வேலை வழங்குவதாகக் கூறினர். வாக்குப்பதிவு முடிந்து ஒரு வாரத்துக்கு மேலாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஏப். 29ஆம் தேதி மாட்டு வண்டித் தொழிலாளர்கள் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்படும். மேலும், அனைத்து தொழிலாளர்களும் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன் குடும்பத்துடன் கூடி கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com