ரயில்பெட்டி உற்பத்தி அதிகரிப்பால் 1,000 புதிய ரயில்களை இயக்க முடியும்:, தொழிற்சங்க நிர்வாகி தகவல் 

ரயில்பெட்டி உற்பத்தி  35 சதவிகிதம் அதிகரித்துள்ளதால், 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 1,000 புதிய ரயில்களை இயக்க முடியும் என தக்ஷிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர்


ரயில்பெட்டி உற்பத்தி  35 சதவிகிதம் அதிகரித்துள்ளதால், 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 1,000 புதிய ரயில்களை இயக்க முடியும் என தக்ஷிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை பெரம்பூர் ஐசிஎப் ரயில்பெட்டித் தொழிற்சாலை, உத்தரபிரதேசம் மாநிலம்  ரேபரேலியில் உள்ள  மார்டன் கோச் தொழிற்சாலை, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கபூர்தாலா ரயில்பெட்டித் தொழிற்சாலை, மேற்கு வங்கத்தில் உள்ள ஹால்டியா தொழிற்சாலை என மொத்தம் 4 தொழிற்சாலைகள் இந்திய ரயில்வேயிடம்  உள்ளன.  இந்த தொழிற்சாலைகள் வாயிலாக,  2018-19, 2019-20,  2020-21 நிதியாண்டுகளில்,  பயணிகள் ரயில்களுக்கான 19,169 பெட்டிகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டன.  அதற்கான திட்ட  அட்டவணையை ரயில்வே வாரியத்தின்  இயந்திர பொறியியல் பிரிவு (மெக்கானிக்கல் என்ஜினியரிங்) இயக்குநர் (உற்பத்தி பிரிவு) கோவிந்த் பாண்டே கடந்த ஜனவரி மாத இறுதியில் வெளியிட்டார்.
இந்த அட்டவனைப்படி கடந்த 2018-19 நிதியாண்டில்  6, 058 ரயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 6037 ரயில் பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, 2017-18-இல் 4,470 பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்ட நிலையில் உற்பத்திதிறன் 35 சதவீதம் கூடுதலாகியுள்ளது. இதனால் வரும் ஆண்டுகளில், அதிகளவில்  புதிய ரயில்களை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தக்ஷிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறியது : ஆண்டு தோறும் காலாவதியாகும் சுமார் 1,300 ரயில் பெட்டிகளை மாற்றுவதற்காக புதிய ரயில் பெட்டிகள் தேவைப்படுகின்றன. உற்பத்தி செய்யப்படும் புதிய ரயில் பெட்டிகளில், காலாவதியாகும் பெட்டிகளுக்கு பயன்படுத்துவது போக மீதம் உள்ள பெட்டிகளை புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ரயில்களுக்கு பயன்படுத்தப் படுகின்றன. அட்டவனைப்படி,  ஹம்சாபர் ரயிலுக்கு ஆண்டுக்கு 200 முதல் 600 எண்ணிக்கையில் 3ஆம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளும், மேலும், உலகத் தரத்தில் 640 ரயில் பெட்டிகளும் தயாராகின்றன. இதனைக் கொண்டு 30 ஹம்சாபர் ரயில்களையும், இதர 32 ரயில்களையும் இயக்க முடியும். மேலும் அந்தியோதயா ரயில்கள் இயக்கவும் 400 பெட்டிகள்,  குறுகிய தூர பயணிகள் ரயில்களை இயக்க 3,396 மெயின் லைன் இ.எம்.யு. பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. குறுகியதூர பயணிகள் ரயில்களை இயக்க வெறும் 8 ரயில் பெட்டிகள் போதுமானது.  
இவை தவிர இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 4,135 , மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் 642, இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் 255,  இதர வகை குளிர்சாதன பெட்டிகள் 76, முன்பதிவு அல்லாத தீனதயாளு ரயில்களுக்கு மொத்தம் 1, 663 பெட்டிகள்,(ஏறக்குறைய 300 விரைவு ரயில்கள் இந்தப் பெட்டிகளைக் கொண்டு இயக்கலாம்)  46 பகல் நேர விரைவு ரயில்களுக்கான 122 குளிர்சாதன பெட்டிகள், குளிர்சாதன வசதியற்ற  619 பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
அதேபோல மின்சார ரயில் பெட்டிகளும் பெருமளவில் தயாராகின்றன. ஒரு மின்சார ரயிலை இயக்க  10 முதல் 12 பெட்டிகள் போதுமானது. இதுதவிர இரட்டை அடுக்கு குளிர்சாதன உதய் ரயில் ஒன்றும், அதிநவீன தேஜா ரயில்கள் இரண்டு இயக்கவும் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. திட்டமிட்டதைவிட ரயில் பெட்டிகள் உற்பத்தி சிறப்பாக நடந்து வருவதை அடுத்து 2021 ஆம் ஆண்டுக்குள் ஏறத்தாழ 1,000 புதியரயில்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த முடியும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com