சுடச்சுட

  

  எந்த பதவியிலிருப்பவர்களுக்கும் தனி மனித ஒழுக்கம் அவசியம்: உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பேச்சு

  By DIN  |   Published on : 29th April 2019 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எந்த பதவியிலிருப்பவர்களுக்கும் தனி மனித ஒழுக்கம் அவசியம் என்றார் ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம். கற்பக விநாயகம்.
  இவர் அளித்த தீர்ப்புகள் சிலவற்றை தொகுத்து மனிதநேய தீர்ப்புகள் என்ற பெயரில் வெளியாகியுள்ள தமிழ்பாகம் -1- என்ற நூல் வெளியீட்டு விழா திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு  நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமை வகித்தார்.   வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் ஜி. விசுவநாதன் நூலை வெளியிட , அதை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பெற்றுக் கொண்டார்.
  இந்த விழாவில், உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி  கற்பகவிநாயகம் ஏற்புரையாற்றி பேசியது:
  எந்தவொரு பதவியில் இருப்பவர்களுக்கும் தனிமனித ஒழுக்கம் மிக மிக அவசியம். அமெரிக்காவில் தனிமனித ஒழுக்கம் மிக உயர்வாக மதிக்கப்படுகிறது. மற்றவர்களைப் பற்றி கவலையில்லை, ஆனால் நாட்டின் அதிபராக உள்ளவருக்கு தனி மனித ஒழுக்கம் மிக மிக அவசியமாகக் கருதப்படுகிறது. எனவேதான் கிளின்டனை மக்கள் ஒதுக்கும்நிலை ஏற்பட்டது. 
   இந்த நிலை இந்தியாவிவும் ஏற்பட்டு, தனி மனித ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  ஒவ்வொருவருக்கும்  அடிப்படையில் நாணயம், ஒழுக்கம் கண்டிப்பாக இருத்தல் வேண்டும், இவை இல்லாதது வாழ்க்கையே இல்லை. 
  தவறு செய்யாதவர்கள் மனிதரில்லை ஆனால் தவறை திருத்திக்கொள்வது முக்கியம்.  மனிதனுக்கு ஒழுக்கம்தான் அழகு. ஒழுக்கமில்லாதவர் மனிதரில்லை.
  நீதிபதிகள் சட்டத்தை மட்டும் படிப்பது கூடாது. நாட்டையும், நாட்டின் அரசியலையும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தீர்ப்புகளை வழங்கும் முன்பு, வழக்கு விவரங்களை நன்றாக அறிந்து, மனிதாபிமானத்துடன் சமூகத்தின் நலனையும் கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கவேண்டும் என்றார் அவர். 
  வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் ஜி. விசுவநாதன் நூலை வெளியிட்டு பேசியது:
  அரசியல் சட்டத்தை கடவுளுக்கு அடுத்தபடியாக பாதுகாத்து வருவது நீதித்துறையும், நீதியரசர்களும்தான். எந்த தவறுகளையும் தடுக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு மட்டுமே உள்ளது.  10 லட்சம் பேருக்கு 15 என்ற விகிதத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை உள்ளது, அதனை அதிகரிக்க வேண்டும்.  
   இந்தியாவைப் பொறுத்த வரையில் 22 மொழிகள் அங்கீகாரம் பெற்றுள்ளன. இதில்  3,200 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட தொல்காப்பியம் உள்ளிட்ட பல்வேறு எண்ணிலடங்கா நூல்களை தன்னகத்தே கொண்டு சிறப்பு பெற்றுள்ள தமிழ் மொழியில் தீர்ப்புகளைத் தொகுத்து நூலாக வெளியிடுவது பாராட்டுதலுக்குரியது என்றார்.
  விழாவில்,  நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், பி. புகழேந்தி,  உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பி.கலைவண்ணன்,  அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்புக் கழகத்தின் நிறுவனர்- தேசியத் தலைவர் எம். ஜெயராமன்,  புரவலர் ஆர். மனோகரன்,  திருச்சி மண்டல அமைப்பாளர் ஆர்.கே.ராஜா, ஆ.ஏ. தாமஸ், நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர்  எம். சேகரன்,  வழக்குரைஞர் எஸ்.என். ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று பேசினர்.  
  பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்தோருக்கு விருதுகளும், பரிசுகளும் விழாவில் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்புக் கழகம் செய்திருந்தது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai