சுடச்சுட

  

  கோடையில் உளுந்து, பச்சைப்பயறு பயிரிட்டு  அதிக வருவாய் ஈட்டலாம்: வேளாண் அதிகாரி

  By DIN  |   Published on : 29th April 2019 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோடை பருவத்தில்  உளுந்து, பச்சைப்பயறு, எள் ஆகியவற்றை பயிரிட்டு அதிக  வருமானம் ஈட்டலாம் என திருச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் க.பால்ராஜ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் விடுத்துள்ள  செய்திக்குறிப்பு:  திருச்சி மாவட்டத்தில் இறவையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சித்திரைப்பட்ட உளுந்து, எள் மற்றும் கோடைகால நெல் சாகுபடிக்கு மிகுந்த பயன்தரும் விதமாக அமைந்துள்ளது. இக்கோடை மழையைப் பயன்படுத்தி டிராக்டர் மற்றும் உளிக்கலப்பை கொண்டு வயல் வெளியின் சரிவுக்கு குறுக்காக உழவு செய்வது பல நன்மைகளையும் தரும். 
  இந்த உழவினால் மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்கள் வெளியே வருவதால் பறவைகளுக்கு உணவாகவும், சூரிய வெப்பத்தாலும் பெருமளவு அழிக்கப்படுகிறது. பயிருக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன.மேலும் பயிரைத் தாக்கும் நூற்புழுக்கள், அவற்றின் முட்டைகள், பூஞ்சாண வித்துக்கள் மண்ணிற்கு மேலே கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தால் அழிக்கப்படுகின்றன. பயிர் சாகுபடியில் விதைப்பு முதல் அறுவடை வரை மண் கடினப்படாமல் மிருதுவாக இருக்கும். இதனால் பயிரின் வேர் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு பயிர் ஊட்டச்சத்துக்களை திறம்பட எடுத்துக் கொண்டு பயிர் செழிப்பாக வளர்ந்து மகசூல் அதிகரிக்கும். எனவே நீடித்த நிலையான வேளாண்மைக்கு உதவிடும் கோடை உழவை தற்போது பெய்திடும் மழையினை கொண்டு விவசாயிகள் அனைவரும் செய்திட வேண்டும்.
  கோடை பருவத்தில் குறைந்த வயதும், குறைந்த நீர்த்தேவையும் உடைய உளுந்து, எள், பச்சைப் பயறு ஆகியவற்றை சாகுபடி செய்து 70 முதல் 80 நாள்களிலேயே விவசாயிகள் நல்ல வருமானம் ஈட்டலாம். எனவே வாய்ப்புள்ள இடங்களில் விவசாயிகள் கோடை பயிர்களான சிறுதானியங்களை சாகுபடி செய்து பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai