சொந்த கிராமத்தை தத்தெடுப்பேன்: தடகள வீராங்கனை கோமதி

தனது சொந்த கிராமத்தை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என ஆசிய தடகளப்

தனது சொந்த கிராமத்தை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை கோமதி மாரிமுத்து ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.கோமதி மாரிமுத்து(30).  இவர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றார். இவர் ஞாயிற்றுக்கிழமை திருச்சிக்கு விமானம் மூலம் வருகை தந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு பூங்கொத்து கொடுத்து வரவேற்று தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
அதன்பிறகு விமான நிலையத்துக்கு வெளியே கல்லூரி மாணவிகள்,  பொதுமக்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், தன்னார்வலர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதையடுத்து கோமதி மாரிமுத்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,  போட்டியில் பங்கேற்கும் போது கிழிந்த ஷூ அணிந்திருந்தது உண்மை தான். எனக்கு அது ராசியானது என்பதால் தான் அதனை அணிந்திருந்தேன். எனக்கு பயிற்சி அளித்த காவல்துறையில் பணியாற்றும் ராஜாமணிக்கு நன்றி.  என்னை யாரென்று தெரியாமல் இருந்தது. தற்போது அனைவருக்கு  தெரிந்துவிட்டதால் பலரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர். அவர்கள் உதவி செய்தால் ஒலிம்பிக் போட்டியிலும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்.
எனது கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை அதிகாரிகளிடம் பேசி நிறைவேற்றுவேன். மேலும், எனது கிராமத்தை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். பரிசு கிடைத்தது மகிழ்ச்சியை தந்தாலும் சிறுவயதிலிருந்தே  எனக்கு ஊக்கமளித்த என் தந்தை இல்லாதது மிகுந்த கவலையளிக்கிறது. கிராமப்புற இளைஞர்கள் அரசு தரும் நலத்திட்டங்களை பயன்படுத்தி கடினமாக உழைத்தால் வெற்றி உறுதி என்றார். இதையடுத்து, முடிகண்டம் கிராமத்தில் கோமதிக்கு பட்டாசு வெடித்து கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com