சுடச்சுட

  

  மணல் குவாரியை திறக்க வலியுறுத்தி மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம்

  By DIN  |   Published on : 30th April 2019 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரியாற்றில் மணல் அள்ள அனுமதிக்கக் கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் திருச்சி  மாவட்ட ஆட்சியரகத்தில்  திங்கள்கிழமை கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
  திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை  மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள், பொதுப்பணித்துறை அனுமதி பெற்று காவிரி ஆற்றில் மணல் எடுத்து  விற்பனை செய்து வந்தனர். நீதிமன்றத் தடையால் மணல் அள்ளுவதற்கு பொதுப்பணித்துறை அனுமதி வழங்கவில்லை. இதனால், பல மாதங்களாக வேலையிழந்த தொழிலாளர்கள் பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  போராட்டத்தின் போது சம்பவ இடத்திற்கு வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகளுடன் பேசி மணல் அள்ள அனுமதி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை ஏற்று போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுகிறது.  ஆனால், மணல் அள்ள அனுமதி வழங்காமல் தொடர்ந்த காலதாமதம் செய்வதால் சனிக்கிழமை தங்களது வீடுகளிலும், மாட்டு வண்டிகளிலம் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கஞ்சித் தொட்டி திறக்கப் போவதாக அறிவித்தனர். ஆனால், இந்தப் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதியளிக்கவில்லை.
  இருப்பினும், திட்டமிட்டபடி  திங்கள்கிழமை காலை கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியரகத்தில் குவியத் தொடங்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். 
  அப்போது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், வாகனத்தில் கஞ்சித் தொட்டியுடன் வந்த தொழிலாளர்கள், வாகனத்தை நிறுத்திவிட்டு தொழிலாளர்கள் அனைவரும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  தகவலறிந்து வந்த  ஆட்சியர் சு. சிவராசு தலைமையிலான அதிகாரிகள், தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.   மே 30 ஆம் தேதி மாட்டு வண்டி தொழிளர்களுக்காக காவிரியாற்றில் மணல் குவாரி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து  போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai