பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு: திருச்சி மாவட்டத்தில் 96.45 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில் 13ஆவது இடத்துக்கு பின்தங்கியது

திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளின்படி 96.45 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளின்படி 96.45 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநில தரவரிசைப் பட்டியலில் கடந்தாண்டு 9ஆவது இடத்திலிருந்த திருச்சி மாவட்டம் இந்தாண்டு 13ஆவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது.
திருச்சி மாவட்ட எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை முதன்மைக் கல்வி அலுவலர் எம். ராமகிருட்டிணன் திங்கள்கிழமை வெளியிட, மாவட்டக் கல்வி அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். தேர்வு முடிவுகளின்படி திருச்சி மாவட்டத்தில் 96.45 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 17,673 மாணவர்கள், 17,630 மாணவிகள் என மொத்தம் 35,303 பேர் தேர்வு எழுதினர். இவர்களில், 16,735 மாணவர்கள், 17,316 மாணவிகள் என மொத்தம் 34,051 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 94.69 ஆக உள்ளது. மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.22 ஆக உள்ளது. மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கல்வி மாவட்டங்கள்: திருச்சி மாவட்டத்தில் லால்குடி, மணப்பாறை, முசிறி, திருச்சி என நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றில், லால்குடி கல்வி மாவட்டத்தில் 7,882 பேர் தேர்வு எழுதி 7,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
தேர்ச்சி 96.59 சதவீதமாகும். மணப்பாறை கல்வி மாவட்டத்தில் 7,777 பேர் தேர்வு எழுதி 7,508 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி  96.54 சதவீதமாகும். முசிறி கல்வி மாவட்டத்தில் 5,743 பேர் தேர்வு எழுதி 5,549 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 96.62 சதவீதமாகும். திருச்சி கல்வி மாவட்டத்தில் 13,901 பேர் தேர்வு எழுதி 13,380 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 96.25 சதவீதமாகும்.
பாட வாரியாக தேர்ச்சி: மாவட்டத்தில் மொத்தமாக 35,303 பேர் தேர்வு எழுதினர். பாட வாரியான தேர்ச்சியில் அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 98.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
இதற்கு அடுத்தபடியாக ஆங்கில பாடத்தில் அதிகபட்சமாக 98.08 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியலில் 97.84 சதவீதம் பேரும், கணிதத்தில் 97.34 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் 97.33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாற்றுத் திறனாளிகள் சாதனை: மாற்றுத் திறனாளி மாணவர், மாணவிகளில் பார்வையற்றோர் 37, காது கேளாத, வாய் பேச இயலாதோர் 38, ஊனமுற்றோர் 56 மற்றும் இதர வகையினர் 113 பேர் தேர்வு எழுதினர். இதில், பார்வையற்ற மாணவ, மாணவிகள் 37 பேரும் தேர்ச்சி பெற்று நூறு சதவீத தேர்ச்சி என்ற இலக்கை எய்தியுள்ளனர். 
இதேபோல, ஊனமுற்றோரில் 56 மாணவர், மாணவிகளும் தேர்ச்சி பெற்று நூறு சதவீத தேர்ச்சி என்ற இலக்கை எய்தியுள்ளனர். காது கேளாத, வாய் பேச இயலாதோர் பிரிவில் 86.84 சதவீதம், இதர வகையினரில் 99.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதேபோல, ஆதிதிராவிட நல பள்ளிகள் 92 சதவீதம், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 100 சதவீதம், மாநகராட்சிப் பள்ளிகள் 98.65 சதவீதம், முழுவதும் நிதியுதவி பெறும் பள்ளிகள் 95.35 சதவீதம், அரசு பள்ளிகள் 95.08 சதவீதம், நகராட்சிப் பள்ளிகள் 66.67 சதவீதம், பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள் 98.69 சதவீதம், சுயநிதி பள்ளிகள் 99.33 சதவீதம், பழங்குடியினர் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
ஆலோசனைக் கூட்டம்: மாநிலத் தரவரிசை பட்டியலில் 9ஆவது இடத்திலிருந்து 13ஆவது இடத்துக்கு பின்தங்கியது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள், பாட ஆசிரியர்கள் என அனைத்து நிலைகளிலும் தனித்தனியே ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் எம். ராமகிருட்டிணன் தெரிவித்தார். 
இக் கூட்டத்தில் பெறப்படும் கருத்துகள், ஆலோசனைகளின்படி தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

துறையூர் ஆர்விபி பள்ளி 100 சதவிதம் தேர்ச்சி
துறையூர் ஆர்விபி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 100 சதவிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 
துறையூர் ராஜ் வித்யா பவன் பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர். 
53 பேர் 450க்கு மதிப்பெண்களுக்கு மேலும், கணிதம், அறிவியல் பாடங்களில் தலா ஒரு மாணவர் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.  மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களை பள்ளித் தலைவர் மு. வரதராஜ்ரெட்டி, பள்ளி தாளாளர் செந்தில்ரெட்டி ஆகியோர் பாராட்டினார்.

229 பள்ளிகள்  100 சதவீதம் தேர்ச்சி
திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 445 பள்ளிகளில் 229 பள்ளிகள் மட்டுமே 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகள் 99 என்பது குறிப்பிடத்தக்கது. 


தேர்வு எழுதிய 33 கைதிகளும் தேர்ச்சி
திருச்சி மத்திய சிறையில் எஸ்எஸ்எல்சி தேர்வு மையம் அமைக்கப்பட்டு சிறைக் கைதிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவது வழக்கம். 2019 ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு 36 பேர் விண்ணப்பித்திருந்தனர். 
இதில், 3 பேர் தேர்வு நடைபெறும் நாள்களிலேயே விடுதலையாகினர். இதையடுத்து 33 பேர் மட்டுமே தேர்வை எதிர்கொண்டனர். தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியான நிலையில், 33 பேரும் தேர்ச்சி பெற்று 100 சதவீதத் தேர்ச்சி என்ற இலக்கை எய்தியுள்ளனர். 
இதில், பாபு என்ற கைதி அதிகபட்சமாக 391 மதிப்பெண்கள் பெற்றார். சுடலைமுத்து 390 மதிப்பெண், கிருஷ்ணன் 380 மதிப்பெண் பெற்று சிறைக் கைதிகளில் சிறப்பிடம் பெற்றனர்.

குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட 14 பேரும் தேர்ச்சி
திருச்சி மாவட்டத்தில், தேசிய குழந்தைத் தொழிலாளர்கள் சீரமைப்புத் திட்டம் சார்பில், மொத்தம் 14 பேர் குழந்தைகள் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு, அவர்கள் பல்வேறு பள்ளிகளிலும் கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
இத்திட்டத்தின் கீழ் அனைத்து வகுப்புகளிலும் மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இதில்,  விஜயகுமார், சுவாமதி, பரத், ஹரிணி, காயத்ரி, தனுஷ்குமார், தேவி, பூபதி, வைதேகி, நதியா, விஜயராகவன், அஹமத், தனபால், நல்லதம்பி ஆகிய 14 பேரும் பத்தாம் வகுப்பு தேர்வில் (நூறு சதவிகிதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். 
தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, தேசிய குழந்தை தொழிலாளர் சீரமைப்பு (சியர்ஸ்) திட்ட இயக்குநர் பியர்லின் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com